அதிக முடி உதிர்வினால் வருந்துகிறீர்களா? இதோ டாப் 10 டிப்ஸ் உங்களுக்காக..!

0
134

தற்போதுள்ள உணவு பழக்க வழக்கத்தாலும், மாறிவரும் சுற்றுசூழல் மாற்றங்களினாலும் நமது உடல்நிலையோடு சேர்ந்து, தலை முடியும் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகிறது. முடி உதிர்தல் என்பது ஆண், பெண் மட்டுமின்றி தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு இது ஒரு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இதற்கு வயது வரம்பே கிடையாது.

முடி உதிர்தல் அதிகமாவதால், முடியின் அடர்த்தி குறைந்து மெல்லியதாக மாறிவிடுகிறது. ஒரு சிலருக்கு முடி அடர்த்தி இல்லாமல் நீளமாக வளரும். ஒரு சிலருக்கு முடி உதிர்வு மட்டுமே இருக்கும். முடி வளர்ச்சி என்பது அதிக அளவில் இருக்காது. இதற்கு காரணம் ஹார்மோன் சமநிலை இன்மை, மன அழுத்தம், போதிய ஊட்டச்சத்து இன்மை என முடி உதிர்வை அதிகரிக்கும் காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இது போதாதென்று ஷாம்புகளையும் பலவகையான இரசாயனம் கலந்த பொருட்களையும் தலை முடிக்கு பயன்படுத்துவதால், முடி உதிர்தல் மேலும் அதிகரிக்கிறது.

இப்படியான முடி உதிர்தலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, நமது முன்னோர்களின் இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம். முடி சம்பந்தமான மற்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வாக இருப்பது, இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் தான். இதனைக்கொண்டு, ஆரோக்கியமான முறையில் முடியினை நீளமாகவும் நன்கு அடர்த்தியாகவும் வளர செய்வது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

டாப் 10 டிப்ஸ்

​1. செம்பருத்தி

hibiscus

செம்பருத்தி தலைமுடி அடர்த்தியை அதிகரிப்பதோடு, தலைமுடியின் நிறத்தையும் மேம்படுத்தி, முடி பட்டுப் போல இருக்க உதவுகிறது. இதனை நீங்கள் ஓரிரு முறை பயன்படுத்தும் போதே தலைமுடி பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும். தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கும் இதனை பயன்படுத்தலாம்.

உதிர்ந்த முடிகளை மீண்டும் பெற:

 • செம்பருத்தி எண்ணெய் தலை முடி வளர்ச்சியை தூண்டி, தலை முடி அடர்த்தியை அதிகரிக்கும். மேலும், தலை அரிப்பு மற்றும் நரைமுடிகளை தடுத்து, பொடுகு தொல்லையையும் சரி செய்கிறது.
 • செம்பருத்தியையும் அதன் இலையையும் பறித்து, அலசி பேஸ்ட் போல அரைத்து வாரம் ஒரு முறை ஹேர்பேக்காக பயன்படுத்தினால், உதிர்ந்த தலைமுடிகளை மீண்டும் வளர செய்ய முடியும்.

2. அதிமதுரம், தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால்

தேங்காய் பாலும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மருந்துகள் தயாரிக்க பயன்படக் கூடிய அதிமதுரம் என்ற மூலிகையானது, ஆயுர்வேத மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து அதன் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

தலைமுடி அடர்த்தியுடன் நீளமாக வளர:

 • தேங்காய் பாலுடன் 2 ஸ்பூன் அதிமதுரத்தை சேர்த்து, நன்கு கலந்து தலைமுடிக்கு தேய்க்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் என தொடர்ந்து பயன்படுத்தவும்.
 • இப்படி செய்வதால், தலைமுடியில் உள்ள பொடுகு நீங்கி, சில வாரங்களிலேயே தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது. மேலும், தலைமுடியின் நீளத்தையும் அதிகரிக்க உதவுகிறது..

3. வல்லாரை, நெல்லிக்காய்

நெல்லிக்காய்

வல்லாரையை பிராமி இலைகள் எனவும் கூறுவர். இது, பெரும்பாலும் ஞாபக சக்திக்கும் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாது வல்லாரை தலையிலுள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை சுறுசுறுப்பாக வைப்பதற்கும், தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் மிகச்சிறந்த மூலிகையாக பயன்படுகிறது.

தலைமுடியின் கருமையும் அடர்த்தியும் அதிகரிக்க:

 • தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்த, தினமும் 50 மில்லி அளவு நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம். நெல்லிக்காயும், வல்லாரைக் கீரையும் தலைமுடியை கருமையாக வளர வைக்கும்.
 • வல்லாரைக் கீரை மற்றும் நெல்லிக்காயை அரைத்து, தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். இதனை தொடர்ந்து செய்வதால், சில வாரங்களிலேயே தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

4. உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கிலுள்ள ஸ்டார்ச் தலைமுடிக்கு நல்ல பொலிவையும், பளபளப்பையும் தருகிறது. மேலும் முடியிலுள்ள வறட்சியை தடுக்கவும் உதவுகிறது. உருளைக்கிழங்கு தலைமுடிக்கு சிறந்த கண்டிஷ்னராகவும் பயன்படுகிறது.

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டி முடி அடர்த்தியாக வளர:

 • தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பு அல்லது சீயக்காயை பயன்படுத்திய பிறகு உருளைக் கிழங்கு வேகவைத்த தண்ணீர் இருந்தால், அதை வீணென்று நினைத்து கீழே ஊற்றிவிடாமல் தலைமுடிக்கு இந்த தண்ணீரை பயன்படுத்தலாம்.
 • இதிலுள்ள ஸ்டார்ச்சும் புரோட்டீனும் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டி முடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இந்த நீரில் தலைமுடியை அலசிய பிறகு, அப்படியேயும் விடலாம் அல்லது சாதாரண நீரிலும் கழுவி விடலாம்.

5. கடலைமாவு

கடலைமாவு

நமது முன்னோர்கள் குழந்தையை குளிக்க வைக்கும் போது, தலைமுடிக்கும் உடலுக்கும் கடலை மாவை பயன்படுத்துவார்கள். இதே போல் வீட்டில் சீயக்காய் இல்லாதபோதும் கடலை மாவை தலை முடிக்கு பயன்படுத்துவார்கள்.

மெல்லிய முடியை அடர்த்தியாக மாற்ற:

 • கடலைமாவுடன் எலுமிச்சை பழம் மற்றும் தயிர் சேர்த்து ஹேர்பேக்காக தலைமுடிக்கு போடலாம். இதுமட்டுமின்றி சிறிது வினிகரை கடலைமாவுடன் சேர்த்து தலைமுடிக்கு தடவி குளிக்கலாம்.
 • மிகவும் மெல்லியதாக இருக்கக் கூடிய தலைமுடியும், இதனை தொடர்ந்து செய்வதால், கையில் பிடிக்க முடியாத அளவிற்கு தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

6. வெங்காயம்

வெங்காயம்

பொதுவாகவே, வெங்காயத்திலுள்ள சல்பர் முடியின் வேருக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியதாகும். சல்பரின் அளவு பெரிய வெங்காயத்தை காட்டிலும் சின்ன வெங்காயத்தில் தான் அதிகமாக உள்ளது. ஆனால், இரண்டிலும் ஊட்டச்சத்து சமமாகத்தான் உள்ளது. இருப்பினும், சின்ன வெங்காயம் கூடுதல் நன்மையை தரும்.

தலைமுடியை அடர்த்தியாக வளர வைக்க:

 • அடுப்பில் ஒரு கடாயில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சாறு நன்கு தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க விட்டு, இறக்கி ஆற விடவும்.
 • குளிக்கும் முன்பு இதனை தலையில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து குளிக்கவும். வெங்காய சாறு முடியின் வேருக்கு செல்வதால், முடி உதிர்தலை குறைத்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

7. தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய்

தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய்

எண்ணெய் குளியலை, வாரம் இரண்டு முறை செய்வதால் உடலிலுள்ள சூடு தணிந்து உடலும் ஆரோக்கியம் பெரும். இதற்கு பெரும்பாலும், கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தலைமுடிக்கு சீயக்காய் அல்லது இயற்கை முறையில் தயாரித்த ஷாம்புகளை பயன்படுத்துவது நல்லது.

பூஞ்சை தொற்றை நீக்கி, முடிக்கு ஊட்டச்சத்து அளிக்க:

 • சம அளவில் கடுகு எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி, பிறகு வெதுவெதுப்பான நிலையில் தலைமுடிக்கு ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைக்கு குளிக்கவும்.
 • இவை தலைமுடிக்கு ஊட்டச்சத்து மூலங்களாக செயல்படுகின்றன. இதனை குளிர்காலத்தில் அதிகமாக பயன்படுத்தலாம். தலையில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று போன்றவற்றை சரிசெய்ய கடுகு எண்ணெய் பயன்படுகிறது.

​8. கருப்பு உளுந்து

கருப்பு உளுந்து

உடலை ஆரோக்கியமாக வைக்க, கருப்பு உளுந்தை உணவில் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், இது தலைமுடிக்கும் மிகுந்த பயனை அளிக்கிறது. ஒரு சிலருக்கு தலைமுடி மிகவும் மெல்லியதாக காணப்படும். இதனை சரி செய்து, தலைமுடியை அடர்த்தியாக மாற்ற கருப்பு உளுந்து பயன்படுகிறது.

முடியின் அடர்த்தி மற்றும் கருமையை அதிகரிக்க:

 • கருப்பு உளுந்தை இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைத்து குளிக்கும் முன்பு, அதனை அரைத்து தயிருடன் கலந்து தலைமுடிக்கு ஹேர்பேக்காக போடலாம். பசு மாடு தயிரை காட்டிலும் எருமை தயிரை பயன்படுத்துவது கூடுதல் பயனை தரும்.
 • தயிர் புரதத்தையும் கொழுப்புச்சத்தையும் தலைமுடிக்கு அதிகமாக கொடுக்கிறது. எனவே இதனை, மாதம் இரண்டு முறை என தொடர்ந்து பயன்படுத்துவதால், தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் மாறும்.

9. ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ்

பொதுவாகவே, ஆயில் மசாஜ் ஊட்டச்சத்துக்களை தலைமுடிக்கு கொண்டு சென்று, தலைமுடியின் வளர்ச்சியைத் பெரிதும் தூண்ட உதவுகிறது. மேலும் தலைமுடியின் சருமத் துளைகளை திறந்து எண்ணெயை உள்ளிறங்க செய்வதால், முடிக்கு தேவையான ஊட்டச்சத்தும் நீர்சத்தும் கிடைத்து விடுகிறது. தலைமுடியின் வேர்க்கால்களை ஆயில் மசாஜ், சூடு இல்லாமல் குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

தலைமுடியின் வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்க:

 • சம அளவு விளக்கெண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி, பிறகு வெதுவெதுப்பான நிலையில் தலைமுடிக்கு ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து குளித்தாலே போதும்.
 • இதனை மாதத்திற்கு இரண்டு முறை செய்தாலே, தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்திட முடியும். இதனால், தலைமுடியின் வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும்.

10. முட்டை மஞ்சள் கரு

முட்டை மஞ்சள் கரு

முட்டையின் வெள்ளை கருவை எல்லோரும் பயன்படுத்துவார்கள். ஆனால், மஞ்சள் கருவை அதிகம் பயன்படுத்துவது கிடையாது. இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கரு அதிக நாற்றம் வீசும் என்பதால்தான். இந்த நாற்றத்தை போக்க, எசன்ஷியல் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயை போன்ற வாசனையுள்ள ஏதேனும் ஒன்றை சேர்த்து பயன்படுத்தலாம்.

வேர்க்கால்களில் முடி அடர்த்தியை அதிகரிக்க:

 • எலுமிச்சை சாறுடன் முட்டையின் மஞ்சள் கருவையும் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் தலைமுடியில் தேய்த்து ஊறவிடவும். பிறகு, கெமிக்கல் குறைவாகவுள்ள ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலைமுடியை கழுவவும்.
 • வேர்க்கால்களில் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, அதன் அடர்த்தியை முட்டையின் மஞ்சள் கரு அதிகரிக்க​ உதவுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தும் புரதச்சத்தும் முட்டையின் மஞ்சள் கருவில் நிறைந்துள்ளதால், தலைமுடிக்கு இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here