தேங்காய் பூரண கொழுக்கட்டை செய்வது மிகவும் எளிமையானது. விநாயகருக்கு படைக்க நினைத்தால், இந்த தேங்காய் பூரண கொழுக்கட்டையை படைக்கலாம். இது சாதாரண கொழுக்கட்டையாகும். இதை வரலக்ஷ்மி நோன்பிற்கும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 1 கப்
- தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு
பூர்ணத்திற்கு,
- ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
- தேங்காய்(துருவியது) – 1/2 கப்
- வெல்லம் – 1/4 கப்
செய்முறை:
STEP 1
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி, தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து ஓரளவு கெட்டியான பிறகு, ஏலக்காய் பொடி தூவி இறக்கி, ஆற வைத்து வடிகட்டி கொள்ளவும். இப்போது வெல்லப்பாகு ரெடி.
STEP 2
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கையால் நன்கு கலக்கியப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக சுடுநீரை அல்லது வெதுவெதுப்பான நீரை அதில் ஊற்றி கட்டி பிடிக்காமல், கையால் நன்கு பிசைந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
STEP 3
அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுத்தப் பிறகு அதனுடன் வடிகட்டிய வெல்லப்பாகு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு, நீர் முழுமையாக சுண்டியதும், தேன் போன்ற பதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, சிறிது நேரம் கிளறி விட்டு ஏலக்காய் பொடி தூவி 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு கிளறிய பிறகு, இறக்கி ஆற விட வேண்டும்.
STEP 4
ஆற வைத்துள்ள தேங்காயை எலுமிச்சை அளவுக்கு உருண்டையாக உருட்டி, ஒரு தட்டில் வைக்கவும். இதே போல், தேவைக்கேற்ப செய்து கொள்ளவும். பிறகு, இரு கைகளிலும் தேங்காய் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை அளவுக்கு உருண்டையாக உருட்டி, தட்டையாக தட்டி அதன் நடுவே உருண்டையாக உருட்டிய தேங்காயை வைத்து, கூம்பு வடிவிலோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவிலோ உங்களது தேவைக்கேற்ப செய்து கொள்ளவும்.
STEP 5
இட்லி பாத்திரத்தில் இட்லியை வேக வைப்பது போல, முதலில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், அதன் மேல் இட்லி தட்டை வைத்து அதில் கூம்பு வடிவில் அல்லது உங்களுக்கு பிடித்த வடிவில் வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக வைத்து மூடி, 10 முதல் 12 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான தேங்காய் பூர்ண கொழுக்கட்டை தயார்!