விநாயகரின் பிறந்த நாளான, “ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி” என்பது இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இவ்விழா ஒவ்வொரு தமிழ் ஆண்டும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று ஆவணி மாதம் அமாவாசை கழித்து, “ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி” விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, 2022-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி புதன்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே ஒரு செயலை துவங்கும் முன், பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது வழக்கம்.
நமது செயல் நல்ல முறையில் முடியவும், முழுமையாக வெற்றி பெறவும் நாம் வணங்கும் முழு முதற்கடவுளாக இருப்பது பிள்ளையார் தான். ருத்ராட்ச மாலையை எடுத்து வாரம் ஒரு முறை பன்னீரிலோ அல்லது பசும்பாலிலோ அந்த மாலையை ஊறவைத்து, விநாயகருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பானது. பிள்ளையாரை குறிப்பாக, புதன்கிழமைகளில் வணங்கினால் மிகவும் சிறப்பான நன்மைகள் நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஐந்தெழுத்து மந்திரம்:

ஞானம், கிரியை ஆகிய சக்திகளை உணர்த்துபவையாக பிள்ளையாரின் திருவடிகள் உள்ளது. மேலும் முக்கண்களாக சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்றையும் பெற்றவர் பிள்ளையாரே. இறைவன் ஐந்தொழில்களை செய்து மக்களைக் காப்பதாக புராணங்களிலும், வேதங்களிலும் குறிப்புகள் உள்ளன. அதன்படி படைத்தல்(துதிக்கை), காத்தல்(மோதகம் ஏந்திய திருக்கரம்), அழித்தல்(அங்குச கரம்), அருளல்(தந்தம் உள்ள கை), மறைத்தல்(பாசம் உள்ள கை) ஆகியவை பிள்ளையாரின் ஐந்து கரங்களின் ஐந்தொழில்களாகும். மேலும் ஐந்து கரங்களின் ஐந்தெழுத்து மந்திரம், “சிவாய நம” என்பதுதான்.
விநாயகர் சதுர்த்தியன்று:

தமிழகத்தில் விநாயகர் சிலைகள் முக்கால் அடியிலிருந்து 70 அடி வரை பல்வேறு விதமான உருவங்களில் செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு ஊரெங்கும் பந்தல்கள் அமைத்து, சிறப்பு வழிபாடுகள் செய்து விநாயகரை வழிபடுவர். விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாளே வீட்டினை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று மட்டுமல்லாமல் தினமும் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது. விநாயகர் சதுர்த்தியில் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளலாம். குல தெய்வ கோவிலுக்கு செல்லமுடியவில்லை என்றாலும் ஒரு சிறிய கலசத்தில் தூய நீரை நிரப்பி, அதனை குல தெய்வமாக நினைத்து வழிபடலாம்.
வீடுகளில் அல்லது கடைகளில் சிறிய அளவில் செய்து வைக்கப்படும், விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு செய்யும் முறை:

ஒரு பலகையை சுத்தம் செய்து அதில் கோலமிட்டு, அதன் நடுவே பிள்ளையாரை வைத்து பட்டுத் துணி அல்லது காவி துணி உடுத்தி, மாலை அணிவித்த பிறகு பூ, சந்தனம் அல்லது மஞ்சளிட்டு, அதன் மீது குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி எருக்கம்பூ அல்லது அறுகம்புல் மாலை, தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுடன் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
பிள்ளையாரின் முன்பு, ஒரு பித்தளை தட்டில் சிறிது அரிசி போட்டு பிறகு, மஞ்சள் தூளில் சிறிது தண்ணீர் சேர்த்து பிள்ளையாராக பிடித்து வெற்றிலை மீது வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுடன் விநாயகருக்கு தீப ஆராதனையுடன் பூஜை செய்து, பிள்ளையாருக்கு பிடித்தமான பலகாரங்கள், கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் மற்றும் முருக்கு, பொறி ஆகியவற்றை வைத்து படைக்கலாம்.
மேலும் சுண்டல், சர்க்கரை பொங்கல், தக்காளி சாதம் என இந்த மூன்றையும் படைத்து, “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்து விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்ட பிறகு, வழிபாடு செய்த பிரசாதங்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வர். இதன் பிறகு, ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் 3வது நாள் அல்லது 5வது நாளில் விநாயகர் சிலைகளை கரைத்து விநாயகர் சதுர்த்தியை நிறைவு பெற செய்வர்.