முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “மாட்டுத்தாவணியில், 600 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பூங்காவை, 5 ஏக்கர் பரப்பளவில் அமைத்து, புதிய தொழில் நிறுவனங்களுக்கு தரமான உள் கட்டமைப்பு வசதி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். தென்மண்டல மாநாடு மதுரையில், ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் நடந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலரான அருண்ராய் வரவேற்றார்.
எம்.பி.,வெங்கடேசன், தியாகராஜன், மூர்த்தி, அன்பரசன், கலெக்டர் அனீஷ்சேகர், மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கு பெற்றனர். பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் மூலம், புத்தாக்க சிந்தனைகளை வளர்க்கும் முத்திரையையும், ரூ.1,391 கோடி மதிப்பிலான திட்டங்களையும் வெளியிட்டு…
முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
“சொத்துக்களை அடமானம் வைத்து தொழில் முனைவோர், கடன் பெறும் போது சார்-பதிவாளர் அலுவலகத்தில், உரிமை பத்திரத்தை ஒப்படைத்து பதிவு செய்ய வேண்டும். எத்தனை முறை அதே சொத்தின் மீது கூடுதலாக கடன் பெற்றாலும், சார் – பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.
இப்படி செய்வதால், வீண் அலைச்சலோடு கால தாமதமும் ஏற்படக் கூடும். இதற்கு பதிலாக, கூடுதல் கடன் அதே சொத்தின் மீது வாங்க நினைத்தால், மீண்டும் சார் – பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது அவசியம் இல்லை. எளிமையாக, இதற்கான பதிவினை ‘ஆன்லைன்’ முறையில் செய்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக:
மாட்டுத்தாவணியில், மதுரை மாநகராட்சி மற்றும் டைடல் நிறுவனம் சார்பாக, ரூ.600 கோடி மதிப்பில், அறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில் 5 ஏக்கர் பரப்பளவில் டைடல் பூங்கா அமைத்து, தரமான உள் கட்டமைப்பு வசதியை புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
2- வது கட்டமாக:
டைடல் பூங்காவை 5 ஏக்கரில் மேலும் விரிவுபடுத்தப்படும்.
இதன் மூலமாக, 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பினை பெறுவர் என்று கூறினார். மேலும், தொழில்கள் சார்ந்த வளர்ச்சி மட்டும் தொழில் வளர்ச்சி அல்ல. இதுமட்டுமல்லாது, பல்லாயிர கணக்கான குடும்பங்களும் வளர்ச்சி பெறும். இது மாநில வளர்ச்சி குறியீட்டை அதிகரிக்க பெரிதும் உதவும்.
புவிசார் குறியீட்டு பெற்றுள்ள 42 பொருட்களில் 18 பொருட்களும், புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்துள்ள 25 பொருட்களில் 14 பொருட்களும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவையாகும். இந்தியாவில், தொழில்கள் துவங்குவதை எளிமையாக்கியதன் மூலம் தமிழகம் 14வது இடத்தில் இருந்து, 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.