இங்கிலாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறத. இதில் இலங்கை மகளிர் அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. முதலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. நடைபெற்ற டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இவ்விரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் கடைசி ஆட்டமான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெரும் அணியே இத்தொடரை கைப்பற்றும் என்ற நோக்கில் ஆட்டம் தொடங்கப்பட்டது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ்கை வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களில் ஆட்டம் இழந்தது. இலங்கை அணி கேப்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர் என்பது பெருமைக்குரியது.

இதனையடுத்து, 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் விறுவிறுப்பாக ஆடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்களை அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியது.
மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக, இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணியை வென்றது என்பது பெருமைகுரியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அசத்தலாக ஆடிய இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துக்கு ‘ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி ‘ விருதுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.