Teachers Day Speech Competition in Tamil | ஆசிரியர் தினம் பேச்சு போட்டி | Happy Teachers Day 2023

Teachers Day Speech Competition in Tamil
Teachers Day Speech Competition in Tamil

Teachers Day Speech Competition in Tamil

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். அறிவென்னும் விளக்கேற்றி அன்பென்னும் வழிகாட்டி எமது வாழ்கையில் ஏற்றம் பெற உதவிய ஆசான்களை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டப்படுகின்ற ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்றைய தினத்தில் ஆசிரியர் தினம் பற்றி சில வரிகள் பேசவிருக்கின்றேன்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும் ஆசிரியர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். நம் வாழ்வு என்னும் கட்டிடத்தை சிறப்பாக கட்டுவதற்கு நம் ஆசிரியர்களே முதன்மை வகிக்கின்றனர். ஒரு சிறு குழந்தை பசியால் வாடும் போது அந்த தாய் குழந்தையின் பசியை ஆற்றுவதற்கு பாலுட்டுவது போல ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலத்தில் நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கு அறிவு என்னும் பாலை ஊட்டுகின்றனர். இப்பெருமைக்குரிய ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

நாம் நல்வழியில் செல்வதற்கும், நாம் முன்னேறுவதற்கும் நம் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு இடம் வகிக்கின்றதோ அதே அளவிற்கு ஆசிரியர்களின் வழிகட்டுதல்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றது. ஆசிரியர்கள், அவர்களின் திறன் கொண்டு பள்ளியில் கற்க வந்த நம்மை உயரவைத்து அவர்களே உயர்ந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள். ஆதலால் மாணவர்களுக்கு சிறந்த அறிவினை வழங்கக் கூடியவராகவும் மாணவர்களின் வழிகாட்டியாகவும் ஆசிரியர்களே காணப்படுகின்றனர்.

வாழ்கையில் மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களை நாம் பெற்றோருக்கு அடுத்து குருவாக போற்றுகின்றோம். இத்தகைய ஆசிரியர்களை நாம் வாழ்வின் உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் மறவாது போற்றுவது நமது அனைவரின் கடமையாகும்.

ALSO READ > ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தினமும் பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களும்

செப்டம்பர் 5-ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை அனைத்து நாட்டு மக்களும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்ல ஆசிரியராகவும் மாணவர்களின் நல்ல வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார். ஆசிரியர்கள் என்றாலே மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கம், பண்பு நலன்கள், ஊக்குவிப்பு, அதிக தன்னம்பிக்கை, எதிலும் விடாமுயற்சி ஆகியவைகளை கற்றுக் கொடுத்து நல்வழிப்படுத்துபவர்கள் என்று அவர் கூறினார். ஆகையால் மாணவர்களின் மத்தியில் சிறந்த ஆசிரியராக டாக்டர் ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார்.

இவர் கல்கத்தா பல்கலைக்கழகம், மைசூர் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஆசிரியராக பணிபுரிந்த பின்னரே அரசியலில் நுழைந்தார். 1962-ல் இவர் குடியரசு தலைவராக பதவியேற்ற போது அவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடுவதற்கு அனுமதி கோரினர். மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவர் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட அனுமதியளித்தார். அன்று முதல் இன்று வரை அவரது பிறந்த நாளை நாட்டு மக்கள் அனைவரும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றோம்.

நமக்கு உலகை காட்ட
நம்மை செதுக்கியவள் தாய்
உலகிற்கு நம்மை காட்ட
நம்மை செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்

என்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து எனக்கு பேச வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

ஆசிரியர்களின் முக்கியத்துவம்

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வருங்காலங்களில் சிறந்த விஞ்ஞானியாகவோ, வைத்தியராகவோ, சிறந்த தலைவராகவோ பல சாதனைகளை புரிய வேண்டும் என்று தனது இலக்கை நிர்ணயிக்கின்றார்கள். இந்த இலக்கை அடைந்து மாணவர்கள் வாழ்வில் வெற்றியடைய ஆசிரியர்களே முதற்படியாக திகழ்கின்றார்கள். ஆண்டுதோறும் தனது பணியை சிறப்பாக செய்து மாணவர்களை நல்வழிபடுத்தும் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையாக ஆசிரியர் தினமானது கொண்டாடப்படுகிறது.

சில மாணவர்கள் படிப்பில் ஆர்வமுள்ளவர்களாகவும் இன்னும் சிலர் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய வேறுபாடுகளைக் கொண்ட மாணவர்களின் மத்தியில் ஆசிரியர்கள் வெறும் கல்வியை கற்பிக்கும் ஆசானாக மட்டுமின்றி அவர்களின் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து அவர்களின் தனித்திறமைகளை உணர்ந்து அவர்களுக்கு அதை எடுத்துரைத்து அவர்களின் திறமையை வளர்த்து கொள்வதற்கும் துணைபுரிகின்றார்கள்.

ஒரு மாணவர் நல்வழியில் செல்வதும் திறம்பட செயல்படுவதும் ஒரு ஆசிரியர் கையில் தான் உள்ளது என்ற வகையில், அவர்களே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான சாதனையாளர்களை உருவாக்க வித்திட்டவர்கள் ஆவர். இத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆசிரியர் தினமானது கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

அனைத்து நாடுகளிலும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அனைத்து பாடசாலையிலும் ஆசிரியர் தின நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்துகொண்டு தனது ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையாக கவிதைகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பாடல் பாடி தனது வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.

அதுமட்டுமின்றி தனது வகுப்பறைகளை அலங்கரித்தும் அவர்களின் கைகளால் தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கியும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.