வீட்டில் யாருக்காவது மனநல பிரச்சினை ஏற்பட்டால், நன்கு படித்தவரும் இது எந்த வகையான பிரச்சனை என்பதை புரிந்து கொள்வது சற்று கடினமாக தான் இருக்கிறது. ஏனெனில் இது உளவியல் சார்ந்ததா? அல்லது மனநல பாதிப்புகள் சார்ந்ததா? என்ற புரிதல் நிச்சமாக தேவைப்படுகிறது. அப்போது தான் எந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.
மனநல மருத்துவருக்கும் உளவியலாளருக்கும் உள்ள வித்தியாசம்:
- ஒரு மனநல மருத்துவர்(psychiatrist) மருந்துகளை பரிந்துரைக்க முடியும்.
- அதே நேரத்தில், ஒரு உளவியலாளர் (psychologist) மீட்புக்கான சிகிச்சை அணுகுமுறையில் கவனம் செலுத்துகிறார்.
இவ்வாறு, உளவியலாளர் மற்றும் மன நல மருத்துவர் என இருவருக்கும் இடையே மிகுந்த வித்தியாசம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியான வித்தியாசம் தான் என்ன? என்பதை தற்போது தெளிவாக காணலாம். இவை இரண்டுமே வெவ்வேறு துறைகள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
1. மனநல மருத்துவர்(psychiatrist)

மன நோய் மருத்துவர் (psychiatrist) என்பவர் உளவியல் துறையில் “மருத்துவ டாக்டர்” (M.D. Psychiatry) பட்டம் பெற்றவராக இருப்பார். இவர் மன நலம் தொடர்பான பிரச்சனைகளை சரியாக கணித்து அதற்கேற்ற தீர்வினை வழங்குவார்.
உயிரியல் மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படும் மன நோய்களுக்கு மனநல மருத்துவர் கொடுக்கும் மருந்துகளும் தேவையானது. பெரும்பாலும் மின் அதிர்வுகள் மற்றும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்துவார்.
2. உளவியலாளர் (psychologist)

மனநல ஆலோசகர் / உளவியலாளர் என்பவர் உளவியல் படிப்பில் “டாக்டர் பட்டம்”(Psychologist) அல்லது மனநல ஆலோசனை படிப்பில் “முதுகலை பட்டம்” (Psychology) பெற்றவராக இருப்பார். ஒரு உளவியலாளர், PhD முடித்த பயிற்சி பெற்ற “மன நல நிபுணர்” ஆவார். உளவியல் ஆலோசனை வழங்குவதற்கான உரிமம் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்றவரிடம் ஆலோசனைப் பெறுவது சிறந்ததாக அமையும்.
ஒருவரிடம் அறிவியல் அணுகுமுறையில் பேசி, பிரச்சினையை அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பொறுமையாக முதலில் தெரிந்து கொள்வார். மேலும், ஒருவரின் சிந்தனை(thinking), நடத்தை(behavior), உணர்வுகள்(feeling), செயல்பாடுகள்(activities) என எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றதை ஏற்படுத்தி, அவர்களுடைய வாழ்கையை மேம்பட்டதாக மாற உதவுகிறார்.
உளவியல் காரணங்களால் ஏற்படக் கூடிய மன நல பாதிப்புகளாவன; மன அழுத்தம், அளவுக்கு மீறிய அச்சம், மனச்சோர்வு, பதின்ம வயது மன குழப்பங்கள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள், மனப்பதற்ற உள நோய்…போன்றவைகள் இதில் அடங்கும். அவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வினை அறிவுறுத்தலாக அல்லாமல், பாதிக்க பட்டவரே தேர்வு செய்ய துணை நிற்பார்.
நெருக்கமானவிரின் பிரிவு அல்லது இறப்பு, படிப்பில் கவனம் குறைதல் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைக்கும் மனநல ஆலோசகர் வழங்கும் ஆலோசனை மற்றும் சைக்கோதெரபியே போதுமானது. எந்த வகையான பிரச்சினையாக இருந்தாலும், அதனை உளவியல் ரீதியாக ஆராய்ந்து சரியான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்.
இதற்கென வாழ்வியல் திறன்கள், மனதின் செயல்பாடுகள் குறித்த புரிதல்களை ஏற்படுத்தும் உள கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை பாணி(Healthy Life Style) குறித்த பயிற்சிகள் போன்ற உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவையனைத்தும் மனநலம் சார்ந்தது என்பதால், அதற்கான தகுதி பெற்றவர்கள் மட்டுமே மருந்துகளின்றி சிகிச்சை(psychotherapy)மற்றும் ஆலோசனை(counselling) வழங்க முடியும்.
நமக்கு தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். இவை வெறும் சொல்லில் அடங்கக் கூடியவை அல்ல. பெரும்பாலும் மனநலப் பிரச்சினையின் அடையாளங்களை அறிகுறிகளாக தெரிந்து கொள்வது நல்லது. அதிலிருந்து வெளி வருவதற்கான முதல் படி இதுதான்.
பெரியவர்களிடம் காணப்படும் அறிகுறிகள்

- தினசரி செயல்பாடுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுதல், நீடித்திருக்கும் கவலைகள் அல்லது எரிச்சல்கள்
- திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது திரும்பத் திரும்ப ஒரே செயலை கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது. (உதாரணம்: அடுப்பை அணைத்து விட்டோமா என பலமுறை சரிபார்ப்பது அல்லது கையை கழுவிக் கொண்டே இருப்பது)
- அளவுக்கு அதிகமான கோபம் / குற்ற உணர்வு, தன்னைத்தானே காயபடுத்திக் கொள்ளுதல், மிகுந்த / தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம்
- தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ அல்லது ஆசைகளோ இல்லாமல் இருத்தல், பாலுறவில் வெறுப்பு அல்லது துணையை தவிர்ப்பது
- எதிலும் நாட்டமின்மை, அதீதமாக சுத்தம் பார்ப்பது, எல்லாவற்றுக்கு பிறரைச் சார்ந்து இருப்பது, தெளிவற்ற சிந்தனை
- அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உள்ள போதை / மதுப் பழக்கம், தற்கொலை எண்ணங்கள்
- காரணமின்றி மற்றவர் மீது சந்தேகப்படுவது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
- விரைவாக விந்து வெளியேறுதல் / உச்சகட்டம் அடையாதிருத்தல்
- பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகும் கண்டுப்பிடிக்க முடியாத உடல் கோளாறுகள் (உதாரணம்: எரிச்சல் கொண்ட குடல் நோய் / Irritable Bowel Syndrome)
- இல்லாத விஷயத்தைப் பார்ப்பது / யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல், தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது
- வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக உடை மாற்றுதல், பிறரையோ, தன்னைத் தானோ துன்புறுத்துதல், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தையுடன் உறவு கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள்.)
- உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது, மாறிவரும் அதிக சந்தோஷம் / அதிக கவலை ஆகியவை பெரியவர்களிடம் காணப்படும் அறிகுறிகளாகும்.
பதின்ம வயதினருக்கான(Teenage) அறிகுறிகள்

- பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல், உடல் ரீதியான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுதல்
- உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம், பிடித்த விஷயத்தில் நாட்டமில்லாமல் போவது
- அடிக்கடி கோபப்படுதல், கட்டுப்படுத்த முடியாத போதை / குடிப்பழக்கம், குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல்
- பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருட்களை சேதம் செய்தல், கட்டுப்படாமல் இருத்தல்
- தினசரி செயல்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் போவது, உடல் எடை குறித்த மிகுந்த பயம் / பதற்றம்
- பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் கூடிய நீடித்திருக்கும் எதிர்மறை மனநிலை
- திரும்பத் திரும்ப வரும் துன்புறுத்தும் எண்ணங்கள், திரும்பத் திரும்ப கை கழுவுவது மற்றும் சரி பார்ப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்பாடுகள் ஆகியவை டீன் ஏஜ்-ன் அறிகுறிகளாகும்.
குழந்தைகளுக்கான பொதுவான அறிகுறிகள்

- அம்மாவின் கண்ணை பார்க்காமலிருத்தல், சிரித்தால் பதிலுக்கு சிரிக்காமல் இருத்தல்
- தொடர்ந்து நிர்வாகத்துக்கு பணிந்து போகாமல் இருத்தல் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்
- ஒருவர் சொல்வதை பின்பற்ற இயலாமை (not able to follow directions), தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள்
- முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல், பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்
- ஓரிடத்தில் உட்கார முடியாமல் நிலை கொள்ளாமல் இருத்தல் (Hyperactive)
- கற்றல் குறைபாடுகளான எழுதுவது, படிப்பது, கணக்கு போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சினைகள் (Learning Disabilities)
- கவனம் செலுத்த முடியாத நிலை ( கவனச் சிதறல் / Poor concentration)
- வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புப் படுத்த முடியாமல் போவது, அதிகமான கவலை / பதற்றம் / பயம்
- பேசத் தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல், அடிக்கடி எரிந்து விழுதல் / கோபப்படுதல் (Temper tantrums) ஆகியவை குழந்தைகளுக்கான அறிகுறிகளாகும்.
மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையாகும். இவை எப்போது அளவுக்கு அதிகமாக நீடித்து காணப்படுகின்றதோ, அப்போது தான் இது பிரச்சினைக்கு உரியதாகிறது. ஒருவரின் தனிப்பட்ட திறனை பாதித்து, அன்றாட வாழ்விற்கு பாதிப்பாக இருக்கின்றதோ, அப்போது தான் உளவியல் நிபுணரின் ஆலோசனை தேவைப்படுகிறது. மாறிவரக் கூடிய சூழலுக்கு ஏற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்பவனே மன வலிமை மிக்கவன்.
கூட்டுக் குடும்பங்கள் உடைந்துப் போன இந்தக் காலகட்டத்தில் தான் பெற்றோரின் பொறுப்பும் இரு மடங்காகிறது. பிள்ளைகளின் மனநிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் பிரச்சினை சிறியதாக இருக்கும்போதே, பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் பிள்ளைகள் கவனிக்க யாருமின்றி பாதுகாப்புணர்வை இழந்து, பலவித பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
பிள்ளைகளுக்கு உணவும், இடமும், ஐபேட், டி.வி.யும் தந்தால் மட்டும் போதாது. அவன் சந்தோஷமாக உள்ளானா என கண்காணிக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. இதற்காக எல்லா நேரமும் பிள்ளைகளுடனே செலவிட வேண்டும் என்பதில்லை. பிள்ளைகளுக்கு தேவையான நேரத்தில் அவர்களுடன் இருப்பது முக்கியமானதாகும். அது 20 நிமிடமே என்றாலும், அந்த நேரத்தை பிள்ளைகளிடம் மகிழ்ச்சியாக செலவழித்தாலே போதும்.
பெற்றோரிடம் எதையும் பகிர்ந்தது கொள்ளலாம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டியதும் அவசியம். அவ்வாறு இல்லாமல் தனது பிரச்சினையை சமாளிக்க முடியாமல் திணறுபவன், பெரும்பாலும் பலவீனமான மன நிலையையே கொண்டிருக்கிறான். இதனால், மனநல பாதிப்புகள் ஏற்படக் கூடும். மனநல கோளாறுகளினால் மட்டுமல்லாமல், வாழ்வில் பிரச்சினையை சமாளிக்க முடியாத சூழலில் மருத்துவரை நாடி ஆலோசனைகளை பெறலாம்.
மனம் வலிமையாக இருந்தால் மட்டுமே சரியான சிந்தனையை பெற முடியும். இதனால், எப்போதும் மகிழ்ச்சி தான். உடலுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போல தான், மனநிலை சார்ந்த பிரச்சினைக்கும் தீர்வு காண மனநல ஆலோசகரை அணுகுவது அவசியமானது. இதை அனைவரும் உணருவதால், நமது மக்களின் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். மனமும் தெளிவு பெறும்.