ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி: விநாயகி என்ற பெயரில் பெண் தெய்வமா? அறியப்படும் செய்திகள்…

0
150

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது, விநாயகர் சிலையும் கொழுக்கட்டையும் தான். இது ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும், வளர்பிறை சதுர்த்தி திதியன்று “ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி” கொண்டாடப்படுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

நாம் செய்யும் செயல் வெற்றிகரமாக முடிய பொதுவாகவே, நாம் வணங்குகின்ற முழு முதற்கடவுள் வியாநகர் தான். இவர், 32 வடிவங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும், விநாயகசதுர்த்தி வரும் சமயங்களில் எது பிரபலமாக உள்ளதோ அதை வைத்து, விநாயகரை பேசப்படுவதும் உண்டு. உதாரணமாக டாக்டர் விநாயகர், கொரோனா விநாயகர், விவசாய விநாயர் போன்றவை.

விநாயகி என்ற பெயரில் பெண் தெய்வமா? ஆம்… அதிகம் பிரபலமடையாத விநாயகியை பற்றிய, அறியபடாத பல்வேறு தகவல்கள் உள்ளன. விநாயகியின் உருவம் காலை மடக்கியவாறு, கழுத்துக்கு மேல் விநாயகரை போலவே, யானை முகத்துடன் கையில் வளையல்களுடனும் காணப்படுகிறது.

முதலில் எங்கு கண்டெடுக்கப்பட்டது?

vinayaki

“விநாயகி ஒரு சுதந்திர தெய்வமாக, சமண மற்றும் பெளத்த மரபுகளில் போற்றப்படுகிறது. மேலும் பெளத்த படைப்புகளில், “கணபதிஹிருதயா” (விநாயகரின் இதயம்) என்று விநாயகியை அழைப்பர்” என ஆய்வாளர் பாலாஜி முண்ட்கர் “விநாயகி என்னும் புதிர்” (THE ENIGMA OF VINAYAGKI) எனும் தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் ரைரில் அறியப்பட்ட, யானை தலையுடன் கூடிய விநாயகியின் தெய்வ உருவ சிலையே, முதன்முதலில் கண்டெடுக்கப்பட்டதாகும். மேலும் இது, கிமு 1-ம் நூற்றாண்டு முதல் பொ.ச. 1-ம் நூற்றாண்டு வரையிலான ஒரு சிதைந்த டெரகோட்டா தகடு ஆகும்.

சில சமயங்களில் 64 யோகினிகள் அல்லது சப்தகன்னியர் தெய்வங்களின் ஒரு பகுதியாகவும் விநாயகியை கருதுகின்றனர். பெரும்பாலும் விநாயகி சிற்பங்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பிரபலமாக காணப்படுகிறது.

தமிழ்நாட்டில், விநாயகி சிற்பங்கள்:

vinayaki

தமிழ்நாட்டில் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி), திருச்சுழி (விருதுநகர் மாவட்டம்), சிதம்பரம் நடராசர் கோவில் மற்றும் ஈரோடு பவானியிலும் விநாயகியின் சிற்பங்கள் காணப்படுகிறது. மேலும் சில கோவில்களில் புடைப்புச் சிற்பங்களாகவும், விநாயகி சிற்பங்கள் காணப்படுகின்றன. அவையாவன:

1.வடிவீஸ்வரம் (கன்னியாகுமரி மாவட்டம்) – அருள்மிகு அழகம்மன் திருக்கோவிலில் வீணை வாசித்த படியான, விநாயகியின் சிற்பம்.

2.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பெண் விநாயகர் உருவமானது, “விநாயகத்தாரணி” எனும் பெயரில் உள்ளது. மேலும் இது “வியாக்ரபாத விநாயகி”(புலிக்கால் விநாயகி) எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், புலிக்கால்கள் போல விநாயகியின் கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான்.

3.”சுசீந்திரம் (கன்னியாகுமரி மாவட்டம்) – தாணுமாலயன் கோவிலின் ஒரு தூணிலுள்ள விநாயகியின் சிற்பமானது, விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்” என்று பி. கே. அகர்வாலா, தன் விநாயகி எனும் நூலில் கூறியுள்ளார்.

இந்தியாவில், விநாயகி சிலைகள்:

Vinayaki devi
  • புவனேஷ்வர் (ஒடிசா),
  • ஜபல்பூர் (மத்திய பிரதேசம்),
  • மாண்டசூர் (மத்திய பிரதேசம்).

இவை, 10-ஆம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது. விநாயகியை மத்திய பிரதேசம், பெடகாட் நகரத்தில் இருக்கும் செளசத் யோகினி கோவிலில் நாற்பத்து ஒன்றாவது(41-வது) யோகினியாகவும், “ஸ்ரீ ஐங்கினி” தெய்வம் என்றும் அழைப்பர். இது விநாயகியின், மிகவும் பிரபலமான சிற்பங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

இருப்பினும் “ஆரம்பக்கால சப்தகன்னியரில் தாந்த்ரீக யோகி, யானை தலையுடைய விநாயகி மற்றும் பிராமண சக்தி ஆகியவை தனித்துவமான தெய்வங்கள்” என்று அறிஞர் கிருஷன் நம்புகிறார். மேலும், ஆய்வாளர் முண்ட்கர் என்பவர் “விநாயகி எனும் பெயரில் ஒரு தெய்வம், புத்த மத இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தன்னுடைய ஆய்வறிக்கையில் எழுதியுள்ளார்.

கணபதி வேறு; பிள்ளையார் வேறு;

திருவாரூர் மாவட்டம், செதலபதி கிராமத்தில் விநாயக பெருமான், ஒரு காலை ஊன்றியும் மற்றொரு காலை மடக்கியும், சுசீந்திரம் கோவில் தூண் ஒன்றில் நர்த்தனம் ஆடும் சிலையில், அவர் பெண் உருவில் காட்சியளிக்கிறார். இவ்வாறு பெண்மை கோலம் கொண்டதால், கணேஷினி என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

“நெடுங்காலமாகவே, தமிழ்நாட்டில் விநாயகரை வழிபடுவது என்பது நடைபெற்று வருகிறது. இவரின் உருவ வடிவங்களில் பல்வேறு விதமான மாற்றங்கள் காணப்படுவதற்கு, வழிப்படும் முறைகள் உரிமையுடன் கையாளப்பட்டதும், காலத்திற்கேற்ப ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாகலாம்” என்று பண்பாட்டியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் குறிப்பிடுகிறார். மேலும் இவர், ரிக் வேதத்தில் உள்ள கணபதியும், தமிழ்நாட்டிள்ள பிள்ளையாரும் வேறு வேறு என்கிறார்.

மக்களோடு நெருக்கமாக இருந்தவர்கள் நாட்டார். இவர்களின் தெய்வமாக பிள்ளையார் இருந்தார். இவர்களின் வழிபாட்டு முறையை போலவே தமிழ்நாட்டிலும் பிள்ளையாரை வணங்கினர். சூத்திரர்களுக்கான கடவுளாக இருந்ததால், பிள்ளையாரை வழிபட ஆகமங்கள் பிரத்யேகமாக எதுவும் இல்லாமல் போனது எனவும், அதன் பிறகு ஆடை, அணிகலன்களுடன் காலத்திகேற்ப வைதீக கதைகளுடன் பொருத்தப்பட்டது” எனவும், “பிள்ளையார் அரசியல்” என்னும் நூலில் இவர் கூறியுள்ளார்.

கடவுள் நாயகியாக ‘கணேஷினி’

vinayaki images

விநாயகியை பற்றிய புராணங்களும் உருவப்படங்களும் அதிகம், தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதால், இவை இந்து மத நூல்களில் அதிகம் குறிப்பிடப்படவில்லை. விநாயகியை “கஜானனி” என்றும், “பிள்ளையாரினி” என்றும், “கணேஷினி” என்றும் அழைப்பர். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல இடங்களில் “விநாயகி என்ற பெயரில் பெண் விநாயக சிலைகள் இருக்கின்றன” என்ற செய்திகளும் உள்ளன.

‘பல்வேறு பெயர்களால் குறிக்கப்பட்டாலும், விநாயகி என்ற பெயரே பெரும்பாலும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. பெண் உடலமைப்புடன் யானை தலையை கொண்ட இவ்வுருவங்கள், ஊருக்கு ஊர் வேறு வேறு பெயரில் அறியப்படுகிறது. இந்து மதத்தின் 64 யோகினிகளின் பெயர் பட்டியலில், தனி கடவுளாகவே “விநாயகி” எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக கலாச்சாரத்துறை விரிவுரையாளரான பி. கே. அகர்வாலா, “கடவுள் விநாயகி – பெண் கணேஷா” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் கூறியதாவது,

“விநாயகி அல்லது வராகி என்பது விநாயகர் அல்லது வராகனின் பெண் வடிவமோ அல்லது மனைவியோ கிடையாது என்றும், ஆண் கடவுள் உருவ அடிப்படையில் பெண் கடவுளாக வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார். மேலும், விநாயகியின் தோற்றுவாய் என்றோ தோற்றுவித்தவர்; இவர் என்றோ எந்த தகவலையும் உறுதியாக சொல்ல முடியவில்லை” என்றும் கூறியுள்ளார்.

விநாயகிக்கு வரையறை ஏதுமில்லை:

vinayaki devi images

‘விநாயகர் என்றாலே, ஆண் விநாயகர் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், பெண் பிள்ளையாரும் இருக்கிறது’ என்பது சற்று வியப்புக்குரியது. இதற்கு, தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநரான சொ. சாந்தலிங்கம் குறிப்பிடுவது,

“உண்மையான வரையறைகளோ, தெளிவான காரண கதைகளோ, இதுவரை விநாயகியை பற்றி வரையறுக்கப்படவில்லை என்று கூறுகிறார். மேலும் இவர், கிபி 6-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, பிள்ளையாரை வழிபாடும் முறை என்று எதுவுமின்றி அவரவர் விருப்பம் போல் வழிபடலாம் என்றாகியது. இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் மக்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்திருக்கிறது.

ஆனால் உருவ வழிபாடு இருந்ததற்கான எந்த ஒரு சான்றும், தமிழக தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கவில்லை. மேலும் கர்ண பரம்பரை கதைகளாக கூட, இந்த விநாயகியை பற்றிய எந்த ஒரு கதைகளும் கிடைப்பதில்லை. ஆண் கடவுளுக்கு இணையான பெண் கடவுள் சிலைகளை உருவாக்கி, அதற்கு ஒரு பட்டியலிட்டு “சப்தகன்னியர்” என்றும் வகைப்படுத்துவர். அவை…

மகேஷ்வரி, பிராமினி, இந்திராணி, வைஷ்ணவி என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். மேலும் இதிலுள்ள, பட்டியலும் பெயர்களும் இடத்துக்கு இடம் வேறுபடக்கூடியது. இவை பெண் உருவங்களாக இருந்தாலும், தனித்த தெய்வங்களாக உள்ளன. இது போலவே, பிள்ளையாருக்கும் இப்படி ஒரு உருவத்தை கொடுத்து இருக்கலாம் என்ற பொதுவான வாதமும் இருக்கிறது” என்றும் சொ. சாந்தலிங்கம் கூறியுள்ளார்.

இந்த முடிவை தான், “GODDESS VINAYAKI THE FEMALE GANESA” என்ற நூலில், 1978-ஆம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழக கலாச்சாரத்துறை விரிவுரையாளரான பி. கே. அகர்வாலா வெளியிட்டு உள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here