Red Sandal Wood Movie Review

வறுமையின் காரணத்தால் பசியால் வாடும் மக்களை ஏமாற்றி, செம்மரக்கடத்தலில் ஈடுபட வைக்கும் செம்மரக்கடத்தல் தாதாவின் வலையில் நாயகனின் நண்பனான விஸ்வந்தும் மாட்டிக்கொள்கிறார். தன் நண்பனை காப்பாற்றும் நோக்கத்தில், நாயகன் வெற்றி ஆந்திரா செல்கிறார்.
அப்பொழுது, செம்மர கடத்தி வந்தவர்களோடு வெற்றியையும் போலிசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். விசாரணையில் தாதாவின் பெயரை போலீஸ் தெரிந்து கொள்கிறது. இதனை அறிந்த செம்மர கடத்தல் தாதா, தனது செல்வாக்கின் மூலம் அங்குள்ள போலீசாரை வைத்து, அனைவரையும் என்கவுண்டரில் கொல்ல ஏற்பாடு செய்கிறார்.
செம்மர கடத்தலில் ஈடுபட்ட அப்பாவிகளின் நிலைமை என்ன? செம்மர கடத்தலின் பின்னால் இருக்கும் அந்த தாதா யார்? நாயகன் வெற்றி தனது நண்பனை ஊருக்கு அழைத்து வந்தானா? என்பதே மீதி கதையாகும்.
நாயகன் வெற்றி, காதல், நட்பு, கோபம், வெறி என அனைத்தையும் தன் உணர்வுகளாலும், கண் மற்றும் உடல் மொழிகளாலும் வெளிபடுத்தி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் தனது நடிப்பை உணர்வுப்பபூர்வமாக வழங்கி இருக்கிறார். படத்தின் சில காட்சிகள் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கும் அளவிற்கு உள்ளது. நாயகி தியா மயூரி சில இடங்களில் மட்டுமே வந்து செல்கிறார்.
வில்லனாக கே.ஜி.எப். ராம், நேர்மையான போலிஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராமன், நண்பனாக விஸ்வந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ் பாலாவின் கேமரா வனப்பகுதியை, படம் பார்க்கும் அனைவரின் கண்களையும் கவரும் வகையில் படம் பிடித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்திருக்கிறார். சில காட்சிக்களின் விளக்கம் தெளிவாக அளிக்கப்படாதது, இத்திரைப்படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.
இயக்குனர் குரு ராமானுஜம், செம்மரக்கடத்தலை நேர்த்தியான முறையில் அட்டகாசமான நடிப்பில் இத்திரைப்படத்தை உருவாக்கியதால் மக்களின் மனதில் திறமையான இயக்குனராக இடம் பிடித்துள்ளார்.