கலாட்ட கல்யாணம்! மணமகனின் கையில் இருந்த தாலியை பறித்து மணப்பெண்ணுக்கு கட்ட முயன்ற வாலிபர்! திருமணம் நடந்ததா?

0
78

திருமணத்தை முடித்தால் தடுத்துப்பார்…காதலியின் சவாலால் கோபமடைந்த வாலிபரின் செயல்!

25 வயதாகும் சதீஷ்குமார் என்பவர், சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் வசித்து வருகிறார். இவர் சென்னையிலுள்ள பிரபல நகை கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், வேலை பார்க்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது பெற்றோர் திருமணத்திற்கு வேறு ஒரு மாப்பிள்ளையை அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்துள்ளனர்.

வேறு ஒருவருடன் தனது காதலிக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதையறிந்து அதிர்ச்சியடைந்தார், சதீஷ்குமார். இது குறித்து தனது காதலியிடம், “நீ என்னை காதலித்து ஏமாற்றி விட்டு இப்போது வேறொருவரை திருமணம் செய்யப் போகிறாயா?” என்று கேட்டுள்ளார்.

அந்த பெண் இதற்கு, “எனது பெற்றோர் பார்த்துள்ள மாப்பிள்ளையை தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். எங்கள் திருமணத்தை உன்னால் முடிந்தால் தடுத்துப்பார்” என்று அந்த பெண்ணும் சவால் விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர், முருகன் கோவிலிலுள்ள மண்டபத்தில் அந்த பெண்ணுக்கு நேற்று காலை, அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு முன்னதாகவே, இவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றுள்ளது.

இந்த வரவேற்பில் நண்பர்களும், இருவீட்டாரின் உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இவர்களது திருமண சடங்குகள் நேற்று காலை 6.30 மணியளவில் நடைபெற்று உள்ளது. அப்போது, மணமேடையில் மணமக்கள் இருவரும் வந்து அமர்ந்துள்ளனர்.

மணப்பெண் கழுத்தில் இருவீட்டார் முன்னிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அங்கு வந்த சதீஷ்குமார், மணமகன் கையிலிருந்த தாலியை சினிமா பட பாணியை போலவே தட்டிப்பறித்து, தன்னுடைய காதலியின் கழுத்தில் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இருவீட்டாரும், சதீஷ்குமாரை மடக்கிப் பிடித்து, மணப்பெண் கழுத்தில் தாலியை கட்ட விடாமல் தடுத்துள்ளனர். அதன் பின்னர், அவரை சரமாரியாக அடித்து அவரிடம் இருந்த மணப்பெண் கழுத்தில் கட்ட வேண்டிய தாலியை பறித்தனர். இதன் காரணமாக திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு, ஆர்.கே.நகர் போலீசில் சதீஷ்குமாரை ஒப்படைத்தனர். இவர்கள் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளனர். மணமகன், மணமகள் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் மகளிர் போலீசார் அழைத்து விசாரித்து உள்ளனர்.

அப்போது சதீஷ்குமார், “என்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறொருவரை திருமணம் செய்ய கொள்ளப்போகிறாயே என்று நான் கேட்டதற்கு, முடிந்தால் என்னுடைய திருமணத்தை தடுத்துப்பார் என்று மணப்பெண் சவால் விட்டதாகவும், இதனால் கோபமடைந்த நான், மணபெண்ணுக்கு தாலி கட்டும் சமயத்தில் மணமகனிடமிருந்து தாலியை தட்டிப்பறித்து, மணப்பெண் கழுத்தில் கட்ட முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.”

பின்னர், இரு விட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பிறகு, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மணமகன் மறுத்துவிட்டார். மணமகள் வீட்டாரிடம் இருந்து தாங்கள் செய்த திருமண ஏற்பாடுகளுக்கான செலவுகளை பணமாக வாங்கி தருமாறு மணமகன் வீட்டார் போலீசாரிடம் கூறினார்.

அதற்கு மணப்பெண் வீட்டாரும் சம்மதித்து பணத்தை கொடுப்பதாக கூறினர். பிறகு, காதலனை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணை கேட்டனர். சதீஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் மறுத்து விட்டார். நேற்று நடக்க இருந்த திருமணம் இதன் காரணமாக நடக்காமல் போனது.

இதனால் மூன்று பேரிடமும் எழுதி வாங்கி கொண்டு, போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். மணமக்கள் இருவரும், இதனை அடுத்து அவர்களது குடும்பத்தினருடன் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். மேலும், சதீஷ்குமாரும் சென்றுவிட்டார். மண்டபத்துக்கு வந்திருந்த இருவீட்டாரின் உறவினர்கள் திருமணம் நடக்காமல் போனாதால், ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் வரவேற்பால் மகிழ்ச்சியாக இருந்தவர்கள், நேற்று திருமணம் நின்று போனதால் திருமண மண்டபமே களை இழந்து போனது. மணமகள் தனது காதல் விவகாரம் குறித்து, திருமணம் நிச்சயம் செய்த நாள் முதலே பெற்றோர் உட்பட யாரிடமும் கூறவில்லை.

இயல்பாகவே பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பேசி வந்துள்ளார். யாருக்கும் இதனால், அவர் மீது எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. நேற்று முன்தினமே சதீஷ்குமார் காதலியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்களிடம் நான் மணப்பெண்ணுடன் வேலை பார்ப்பதாக கூறியதால் யாருக்கும், அவர் மீது சந்தேகம் வரவில்லை.

அவர், காதலியின் சவால் காரணமாக காதலியின் கழுத்தில் திருமணத்தை நிறுத்தி, எப்படியாவது தாலி கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கலந்து கொண்டுள்ளார். ஆனால் திருமணத்தன்று தனது காதலன் வந்து இருப்பதை கண்டு மணப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவர், எந்த நேரம் என்ன நடக்குமோ? என்ற அச்சத்துடனே மணமேடையில் இருந்துள்ளார். சதீஷ்குமார், மணமக்கள் அருகில் நின்று திருமண வரவேற்பில் புகைப்படமும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த பகுதியில், இந்தவொரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here