விநாயகர் சதுர்த்தி 2023 | இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? Pidi Kozhukattai in Tamil Recipe

இனிப்பு பிடி கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு படைக்கப்படும் ஒரு இனிப்பு வகையாகும். விநாயகருக்கு பிடித்தமான உணவு வகைகளில் கொழுக்கட்டையும் ஒன்றாகும். மக்கள், தேங்காய் பூரண கொழுக்கட்டை, பருப்பு பூரண கொழுக்கட்டை, மோதகம், காரக்கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை என பல வகையான கொழுக்கட்டைகளை வைத்து விநாயகரை வழிபடுகின்றனர். இதில் அனைவரும் விரும்பி உண்ண கூடிய இனிப்பு பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வருகின்ற விநாயகர் சதுர்த்தியின் போது நீங்களும் இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்து, இறைவனுக்கு படைத்தும் சுவைத்தும் மகிழுங்கள்.

இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

ganesh chaturthi 2023

Pidi Kozhukattai in Tamil Recipe ganesh chaturthi
Pidi Kozhukattai in Tamil Recipe ganesh chaturthi

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 2 கப்
  • பாசிப்பருப்பு – 1/2 கப்
  • நெய் – 1 ஸ்பூன்
  • ஏலக்காய் – தேவையான அளவு
  • வெல்லம் – 1 1/2 கப்
  • துருவிய தேங்காய் – 2 கப்

குறிப்புகள்:

1. கொழுக்கட்டை செய்வதற்கு கடையில் கிடைக்கும் அரிசி மாவு அல்லது வீட்டில் தயாரிக்கபட்ட அரிசி மாவு பயன்படுத்தலாம்.

2. வீட்டில் தயாரிப்பவர்கள், முதலில் 2 அல்லது 3 மணிநேரம் பச்சரிசி மாவை ஊற வைத்து ஈரப்பதம் போனதும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. பாசிப்பருப்பை வேகவைத்து, வெல்லம் மற்றும் அரிசி மாவுடன் சேர்ப்பது கொழுக்கட்டைக்கு கூடுதல் சுவை தரும்.

4. கொழுக்கட்டை மாவை தயாரித்த பிறகு அதை ஈரத்துணியால் மூடி வைப்பது சிறந்தது.

5. கொழுக்கட்டையை பிடிக்கும் பொழுது கையில் நெய் அல்லது எண்ணெய் தடவி கொள்ளவும்.

ALSO READ > விநாயகர் சதுர்த்தி வரலாறு

செய்முறை:

ஒரு வாணலியில் அரிசி மாவை எடுத்து, அதை மிதமான சூட்டில் 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும். பச்சரிசி மாவு வறுபட்டு உதிரி உதிரியாக வரும் பொழுது, அதை தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். வெல்லம் கரைந்து வந்தவுடன், அதில் துருவிய தேங்காயை சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் வதக்கவும். வதக்கிய தேங்காய் நிறைந்த வெல்ல கரைசலை, வறுத்த பச்சரிசி மாவுடன் சேர்க்கவும்.

பின் 1/2 கப் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு ஏலக்காய் போடி ஆகியவற்றை இக்கலவையில் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை ஈர துணியால் மூடி விட்ட பிறகு, நம் கைகளில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக கை தடம் படியும்படி பிடித்துக் கொள்ளவும்.

பிறகு, பிடித்த கொழுக்கட்டைகளை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் வைக்கவும்.

ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டில், பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும்.

7-8 நிமிடம் இட்லி பாத்திரத்தில் உள்ள கொழுகட்டைகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

இப்பொழுது அனைவரும் விரும்பி உண்ண கூடிய மிகவும் சுவையான இனிப்பு பிடி கொழுக்கட்டை தயார்.