வாழ்வில் அமைதியான மனநிலை, நம்மை எந்தவொரு சிந்தனையிலும் தெளிவான முடிவை எடுக்க வைக்கும். இதனால், வாழ்வில் பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். தியானம் என்றால் என்ன? தியானத்தை எப்படி செய்வது? அன்றாட வாழ்வில் எந்த அளவிற்கு நேர்மறை சிந்தனைகளை தியானம் உணர வைக்கிறது… தியானத்தின் பங்களிப்பு என்ன? என்பதை பற்றி இங்கு காணலாம்.
தியானம் என்றால் என்ன???

- நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுகமுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள தியானமே நமக்கு உதவுகிறது. பொதுவாகவே தியானம் என்பது மனதை விருத்தி செய்து கொள்வதற்கான ஒரு சிறப்பான முறையாகும். உலகிற்கு முதன் முதலாக “புத்த பகவானே” தியானம் மூலம், “மனதை மென்மேலும் விருத்தி செய்துக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.
- மேலும் தியானமானது ஒருவருக்கு அன்பு, பொறுமை, தன்னடக்கம், மன்னிப்பு மற்றும் தாராள குணம் உள்ளிட்ட நல்ல குணங்களை ஊக்குவிக்கிறது. நமது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி, இரண்டையும் ஒரே நிலையில் வைத்திட தியானம் உதவி புரிகிறது.
- ஒரு குறிக்கோளை ஆழ்மனதிற்கு எடுத்து செல்வதற்கும், அதனை உணர்ந்து தொடர்ந்து செயல்படவும் தியானம் உதவுகிறது. இதன் மூலம் நேர்மறை எண்ணங்களை அதிகமாக ஈர்க்க முடியும். நமது எண்ணத்தின் அலைகளை கட்டுபடுத்திட தியானம் பெரிதும் உதவுகிறது. சரியான வழியில் வாழ்கையை செலுத்துவதற்கும் தியானம் ஒரு மிக சிறந்த வழியாகும்.
தியானம் ஒரு கருவி:

பொதுவாகவே தியானம் என்பது எண்ணத்தின் அலைகளை கட்டுப்படுத்திடும் ஒரு கருவியாகும். இது சுவாசம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி, நிதானமான உணர்வை மனதிற்கு ஏற்படுத்துகிறது. இது தியானத்தின் தரத்தையும், கவனத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இது இதய துடிப்பை சீராக்கி, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எனவே, மனதுக்கும் உடலுக்கும் மருந்தாக இருப்பது தியானம் தான்.
அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் நமக்கான அமைதியான நேரத்தை ஒதுக்குவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். தியானத்தை தினசரி பயணத்தில் இணைத்துக் கொள்வதால், வாழ்வின் முன்னேற்றத்திற்கு இது ஒரு அச்சாணியாக மாறக்கூடும். நீங்கள் தியானம் செய்வதற்கான எளிமையான முறைகளை இங்கு கூறி உள்ளோம். அதனை படித்து வாழ்வில் செயல்படுத்தினால், நலமான வாழ்கையை வாழலாம்.
ஆழ்மனதிடம் கூறுங்கள்:

நீங்கள் தியானம் செய்ய அமரும் முன்பு, அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு உங்கள் ஆழ்மனதிடம் முடிந்தவரை, “நான் இன்று தியானம் செய்து என்னுடைய மனதை தெளிவுப்படுத்தி, வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள போகிறேன்” என்று உங்களிடம் நீங்களே சொல்லி கொள்ளுங்கள். இவ்வாறு உங்களின் மூளைக்கு செய்தி சென்றடையும் போது, நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் மூளை உங்களிடம் தெரிவிக்கும்.
இதனால் தெளிவான மனநிலை ஏற்படும். இப்போது, தியானம் செய்ய தொடங்கலாம். தியானத்தின் பொழுது தொடக்கத்தில் மனதின் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்த உங்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து செய்துக்கொண்டே வந்தீர்கள் என்றால், அதன் பயனை முழுதாக அனுபவிக்க முடியும். இது உங்களின் மனதுக்கும் மூளைக்கும் பழக்கமாகி விடும். இப்படி தியானம் செய்வதும், இயல்பான ஒன்றுதான்.
பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்:

உடனடியாக எந்த ஒரு செயலையும் நீண்ட நேரம் கவனத்தோடு செய்வது என்பது சற்று கடினமான ஒன்றுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆர்வத்தில் முதல் நாள் ஒரு செயலை விரைவாக செய்து முடித்து விடுவோம். ஆனால், நாட்கள் செல்ல செல்ல நமக்கு அது பழையதாகி விடும். அப்போது நாம் அந்த செயலை செய்வதற்கே யோசிப்போம். ஆதலால், ஒரு செயலை முதலில் செய்யும் போது, உங்களின் குறிக்கோளை சிறியதாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதனை தினமும் செய்ய வேண்டுமென்று, பழக்கப்படுத்தி கொண்டாலே போதும். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமாலும் தொடர்ந்து அந்த செயலில் உங்களின் கவனம் சிதறாமல் செய்து முடிக்க முடியும். முதலில் 5-10 நிமிடங்கள் வரை தியானத்தை தொடங்குங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நேர வரம்பை அதிகரித்துக் கொள்ளலாம். இவ்வாறு விழிப்புணர்வுடன் இருப்பது, உங்களின் மனதிற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
நேர்மறை சிந்தனையை உணருங்கள்:

வசதியான நிலையில், தரையில் அமர்ந்து தியானம் செய்வது சிறந்தது. நாற்காலியிலும் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடலாம். பொதுவாக தியானம் செய்வதற்கு, எந்த நிலையில் இருப்பது உங்களுக்கு வசதியாக உள்ளதோ… அந்த நிலையில் தியானத்தை நேர்மறையாகத் தொடங்கலாம். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். முதலில் உங்களின் சுவாசத்தில் கவனத்தை செலுத்துங்கள்.
உங்களின் மூக்கு, வாய் வழியாக காற்று உடலினுள் செல்லும் உணர்வை கவனித்து, முழுமையாக உணருங்கள். இதனை 2 நிமிடம் செய்து பாருங்கள். இப்படி செய்யும் பொழுது உங்களின் கவனம் சுவாசத்தில் இருப்பதால், சிந்தனையில் தோன்றும் எண்ணங்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவ்வாறு செய்வதால், உங்களுக்கு நேர்மறையான சிந்தனையை உணர வைக்கும்.
கவனச் சிதறலை கட்டுக்குள் வையுங்கள்:

தியானத்தின் பொழுது மனதில் எண்ணங்கள் அலைந்து திரிவது இயல்பான ஒன்றுதான். மனதை நன்கு அலைபாய விட்ட பின், கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ஆனால், அதனை அப்படியே அலைய விடாமல், கவனச் சிதறலை கட்டுக்குள் கொண்டு வருவது அவசியம். பெரும்பாலும் நமது மனதின் எண்ணங்கள் செய்யும் செயலோடு ஒத்து போகும். கவனச்சிதறல் ஏற்படும் பொழுது, உங்களின் கவனத்தை முடிந்தவரை, உங்களின் சுவாசத்தின் மேல் வைக்க முயற்சி செய்யுங்கள்.
இப்படி செய்யும் பொழுது மீண்டும் மனம் அலைப் பாய்ந்தால் மீண்டும் கவனத்தை திசை திருப்பி சுவாசிப்பதில் வையுங்கள். தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டாலே போதும். பொதுவாக, தெளிவான மனநிலை இருக்க வேண்டியது அவசியம். உங்களின் எண்ணங்களை தாராளமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு உங்களின் கற்பனையை அதிகரித்துக் கொண்டு தேவையான இடங்களில் அதனைப் பயன்படுத்துவது, நன்மையே தரும்.
தியானம் மன அழுத்தத்தை குறைக்கும்:

தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைபடுவதால் சுய கட்டுப்பாடு அதிகரித்து, தெளிவான முடிவுகளை எடுக்க உதவுகிறது. இது கவனம் மற்றும் செறிவை மேம்படுத்துகிறது. மேலும் வயதான காலத்தில் மறதியை எதிர்த்துப் போராட உதவுகிறது. தியானத்தினால் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். சுய விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
தினமும் காலையில் 5-10 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபடுங்கள். இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, மனமும் மூளையும் ஆரோக்கியம் பெறுவதோடு, உடலுக்கு தேவையான தூக்கத்தை மேம்படுத்தி பதட்டத்தையும் குறைக்கிறது. இதனால், மன அழுத்தமும் குறைகிறது. மேலும், தியானம் ஒருவரது ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது என்றும் கூறுகின்றனர்.
“ஓம்” எனும் மந்திரமும் தேவை:

தியானம் செய்யும் போது மந்திரத்தை உச்சரிப்பதால், உங்களின் கவனம் சிதறாமல் நேர்மறை எண்ணத்துடன், தியானத்தை தொடர இது ஒரு எளிய முறையாகும். தியானம் என்றாலே பெரும்பாலும் பயன்படுத்துவது “ஓம்” எனும் மந்திரம் தான். அமைதியான இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடும் பொழுது, “ஓம்” என்பதை உச்சரிப்பதால், மனதின் எண்ணங்கள் தளர்வடைந்து, அமைதியானதொரு உணர்வை அடைய முடியும்.
தியானம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், நாள் முழுமைக்கும் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் உதவுகிறது என்பதாலேயே, பள்ளி கல்லூரிகளிலும் இதற்கென தனியாக நேரத்தை ஒதுக்குகின்றனர். நீங்கள் தியானம் செய்ய சிறந்த இடம் என்று ஒன்றும் கிடையாது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். இது உங்களின் வாழ்க்கையில் நிச்சயமாக மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.
தெளிவான மன நிலையுடன் இருங்கள்:

ஒவ்வொரு சுவாசத்தையும் 1-10 வரை எண்ணி முடித்தவுடன் மீண்டும் தொடங்கலாம். தியானத்தை அமர்ந்த நிலையில் மட்டுமே செய்ய வேண்டும் என்ற விதிமுறை கிடையாது. யோகா நித்ரா தியானம் அல்லது சாதாரணமாக படுத்துக் கொண்டும் தியானம் செய்யலாம். உங்களின் தோரணை, ஆற்றல் என செயலின் மீது கவனத்தை செலுத்துங்கள். எப்பொழுதாவது தியானத்தை செய்யாமல், அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் தியானம் செய்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
உடலும் மனதும் ஒரே நிலையில் இருக்குமாறு தியானிக்க முயற்சி செய்யுங்கள். தியானத்தின் இறுதியில் மெதுவாக கண்களை திறந்து உங்களின் கண்களில் படக் கூடிய அனைத்தையும் புதியதாக பார்ப்பதாக உணருங்கள். இதற்கு, சிறிது நேரம் எடுத்து கொள்ளுங்கள். உங்களின் உடல், உணர்ச்சி மற்றும் எண்ணங்களை கவனியுங்கள். இது நாள் முழுவதும் உங்களை தெளிவான மன நிலையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க உதவும்.