பனை ஓலை கொழுக்கட்டை, கார்த்திகை தீபம் திருவிழா அன்று சிறப்பு உணவாக தயாரிக்கப்படுகிறது. இது திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தயாரிக்கப்படும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்றாகும். மக்கள், பனை ஓலையைப் பயன்படுத்தி பல வகையான கொழுக்கட்டைகளை தயாரிக்கின்றனர். இதில் அனைவரும் விரும்பி உண்ண கூடிய பனை ஓலை இனிப்பு கொழுக்கட்டை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Panai Olai Kozhukattai Recipe in Tamil

தேவையான பொருட்கள் :
கொழுக்கட்டை மாவு – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்
சுக்கு, ஏலக்காய் பொடி – தேவையான அளவு
வெல்லம் – 1 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
பனை ஓலை – தேவைக்கேற்ப
குறிப்புகள் :
- கொழுக்கட்டை செய்வதற்கு கடையில் கிடைக்கும் இடியாப்பம் அல்லது கொழுக்கட்டை மாவைப் பயன்படுத்தலாம்.
- கருப்பட்டி வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை செய்வது மிகவும் நல்லது.
- இளம் பனை ஓலையை பயன்படுத்துவது கொழுக்கட்டைக்கு கூடுதல் சுவை தரும்.
செய்முறை :
- இளம் பனை ஓலையை வாங்கி தனித்தனியே பிரித்து எடுத்து கொள்ளவும்.
- நாம் செய்யும் பாத்திரத்தின் அளவிற்கேற்ப பனை ஓலையை வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியை நீக்கி கொள்ளவும்.
- பிறகு 1/4 கப் பாசிப்பருப்பை மிதமான சூட்டில் 2 அல்லது 3 நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.
- வறுத்து வைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் 1 கப் இடியாப்பம் அல்லது கொழுக்கட்டை மாவை எடுத்து கொள்ளவும்.
- இத்துடன் 1 கப் தேங்காய் துருவல், ஊற வைத்த பாசிப்பருப்பு, சுக்கு ஏலக்காய் பொடி, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 1 கப் கருப்பட்டி வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- இந்த வெல்ல கரைசலை, கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை ஈர துணியால் மூடி விட்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக பிசைந்த மாவை எடுத்து பனை ஓலையின் நடுவில் வைத்து, அதை மற்றொரு பனை ஓலை கொண்டு மூடவும்.
- இவற்றை ஒரு நூல் அல்லது பனை ஓலை கயிறு கொண்டு கட்டவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் மீதமுள்ள பனை ஓலையை வைத்து, அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன், கட்டி வைத்த கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து பாத்திரத்தை மூடவும்.
- 10 – 15 நிமிடம் பாத்திரத்தில் உள்ள கொழுகட்டைகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- இப்பொழுது அனைவரும் விரும்பி உண்ண கூடிய மிகவும் சுவையான பனை ஓலை இனிப்பு கொழுக்கட்டை தயார்.