இன்டர்வியூவில் எளிதாக வெற்றி பெற வேண்டுமா? Interview Tips in Tamil!

0
149

நேர்காணலில் எதிரில் இருப்பவரை கவர வேண்டுமா? இதோ உங்களுக்கான 5 உளவியல் உண்மைகள்!

இன்டர்வியூ என்றாலே அனைவருக்கும் ஒரு பதற்றம், பரபரப்பு போன்றவை இன்றளவும் இருக்க தான் செய்கிறது. முதல் நேர்காணலில் தேர்ச்சி பெறுவதும், நேர்காணலை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதும் அவரவரின் தனிப்பட்ட முயற்சியிலும், ஆர்வத்திலும் உள்ளது. இருப்பினும் நம்பிக்கையுடனும் சரியான அணுகுமுறையுடனும் நேர்காணலை சந்தித்தால், வெற்றி நிச்சயம் நம் வசம்தான். நேர்காணலில் வெற்றி பெற முதலில் எதிரில் இருப்பவர்களை ஈர்ப்பது அவசியம்.

பொதுவாகவே நேர்காணல் இல்லாமல் நல்ல வேலை கிடைப்பது மிகவும் அரிது என்பது தானே தவிர, இல்லை என்று கூறிவிட முடியாது. தற்போது அனைத்து விதமான வேலைக்குமே நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டது என்பதால், நேர்காணலில் வெற்றி பெறுவதற்கான திறமைகளை வளர்த்து கொள்வது அவசியமானதாகிறது. அதில் மிகவும் முக்கியமானது கண் தொடர்பு (Eye contact), கேட்கும் திறன் (Listening skills), தொடர்பு திறன் (Communication skills) போன்றவையாகும்.

உங்களின் செயல்பாடுகளையும் சுய அறிவையும் பரிசோதிக்கும் விதமாக, உங்களை சுற்றியுள்ள சமூகத்தையும் சூழ்நிலையையும் நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்களா? என்பதை சார்ந்தே பல நேரங்களில் உங்களுக்கான கேள்விகள் நேர்காணலில் அமையும். அவர்கள் உங்களிடம் சரியான பதிலை எதிர்பார்ப்பதை காட்டிலும், தெளிவான மனநிலையுடன் உண்மையான பதிலை தயங்காமல் அளிக்கிறீர்களா? என்பதையே கவனிப்பார்கள். இது நம் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடும். இதனை நீங்கள் சரியாக தெரிந்துகொண்டாலே போதுமானது, நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.

நாம் நேர்காணலில் செய்யக்கூடிய சின்ன சின்ன செய்கைகளும், செயல்பாடுகளும் கூட நம்மை அவர்களிடத்து அடையாளம் காட்டும். நேர்காணலில் உடல் மொழி, சைகைகள், வெளிதோற்றம், சுய அறிவு, அவர்களின் கேள்வி மீது நமக்குள்ள கவனம், பதிலளிக்கும் ஆர்வம் உள்ளிட்ட அனைத்தையும் பொறுத்தே, அவர்களுக்கு நம் மீது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையும், நாம் கூறும் பதிலில் ஈடுபாடும் வரக்கூடும். எனவே, பணியமர்த்தல் மேலாளர்களை கவருவதற்கான 5 உளவியல் உண்மைகளை பற்றி இங்கு காணலாம்.

1. வெற்றிக்கு முதல் படி இதுவே!

வெற்றிக்கு முதல் படி இதுவே

முதலில் உங்களை உள்ளே செல்லும் முன் அமைதிப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், உங்களின் இதயதுடிப்பு பல மடங்கு அதிகரிக்கக் கூடும். அந்த சில வினாடிகளிலேயே… உள்ளே யாரெல்லாம் இருப்பார்கள், எந்த மாதிரியான கேள்விகளை கேட்பார்கள், அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியாக பதிலை கொடுக்கவில்லை என்றால், வெளியே அனுப்பி விடுவார்களா? என்ற பலபல கேள்விகளும் மனதில் தோன்றி மறையும்.

முதலில் நம்மை நாம் முழுதாக நம்ப வேண்டும். நமக்கு ஏன் இந்த நேர்காணலில் வெற்றி பெறுவது அவசியம் என்பதை மனதில் கொண்டு நிறுத்துங்கள். இந்த நேர்காணலில் தேர்ச்சி அடையாவிட்டால் என்ன நடக்கும் என்று எதிர்மறையாக சிந்திக்காமல் நாம் இதில் வெற்றி பெற்றுவிட்டால், என்னவெல்லாம் நமக்கு கிடைக்கும் என்பதை ஒரு முறை உணர்ந்த பிறகு, உள்ளே செல்ல தயாராகுங்கள். உங்களின் வெற்றிக்கு இதுவே முதல் படி.

2. நம்பிக்கையை வரவழையுங்கள்

நம்பிக்கை

அறைக்குள்ளே செல்லும் முன் உள்ளே வரலாமா என்று அனுமதி பெற்று செல்லுங்கள். முதலில் உங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு நன்றி சொல்லி துவங்குங்கள். அவர்களின் கேள்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்து 2 முதல் 3 வினாடி சிந்தித்து பதிலை கூறுங்கள். கேள்வி கேட்பவரின் கண்களை பார்த்து பேச துவங்குங்கள். அது உங்களின் மேல் நம்பிக்கையை வரவழைக்கும்.

நீங்கள் தன்னம்பிக்கை உள்ளவராக, ஆர்வமுள்ளவராக, எளிதில் உணர்ச்சி வசப்படாதவராக, சரியான முறையில் உங்களின் பதிலை அவர்களிடத்து கொண்டு சேர்க்கையில், நேர்காணல் செய்பவர்கள் உங்களை பணியமர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே…

3. நேர்காணலே உரையாடல் தான்!

நேர்காணலே உரையாடல் தான்

பொதுவாகவே நேர்க்காணல் என்பது ஒரு விதமான உரையாடல்தான். இங்கு இயல்பாக பேசுவதே வெற்றியை பெற்றுத் தரும். இங்கு உரையாடும் போது, தெளிவான மனநிலையுடன் எந்த விதமான சிந்தனையும் இன்றி நிகழ்காலத்தில் இருப்பது அவசியமானதாகும். பேசுவதற்கு கூச்சமோ, தயக்கமோ, வேலையை பெற வேண்டும் என்ற பதற்றமோ இங்கு தேவையில்லை. எப்போதும் நேர்காணல் என்றாலே அனைவருக்கும் அச்சத்தையும், கவலையையுமே வர வழைக்கிறது.

இது அறியாமையின் வெளிபாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் தனிப்பட்ட திறமையை முழுமையாக வெளிப்படுத்தினாலே போதும். நீங்கள் நம்பிக்கையாக உள்ளீர்கள் என்பது உங்களின் தெளிவான வார்த்தைகளிலேயே அவர்களுக்கு புரிந்துவிடும். உங்களின் சான்றிதழ்கள் உங்களின் மற்ற திறமையை வெளிப்படுத்தினாலும் கூட, பேச்சு திறமையை நேர்காணலில் வெளிப்படுத்துவது தான் உங்களுக்கு வெற்றியாக அமையும்.

4. வெளிப்படையாக பேசுங்கள்

வெளிப்படையாக பேசுங்கள்

நேர்காணலுக்கு அளித்துள்ள சுயவிவரத்தில் விவரங்கள் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டியவை அவசியமாகும். எப்போதும் இல்லாத அல்லது தெரியாத ஒன்றை அதில் இடம்பெற செய்யக் கூடாது. சரியான தகவல்களையே அளிக்க வேண்டும். நேர்காணலின் போது நமது தயக்கங்களை போக்கவே, முதலில் எளிமையான கேள்விகளை கேட்பார்கள். அது உங்களின் சுயவிவரத்தில் இருந்தோ அல்லது பொதுவான கேள்விகளாகவோ இருக்கக் கூடும்.

நாம் கூறும் பதிலிலிருந்தே நேர்காணல் செய்பவர்களை ஈர்க்க நமது திறமையையும், கல்வி அறிவையும், தெளிவான மனநிலையையும் அறியுமாறு நமது பேச்சு தெளிவாக எதிரொளிக்க வேண்டும். அவை பொழுதுபோக்கு அம்சங்கள், உங்களது விருப்பங்கள் பற்றிய கேள்விகள் முதலானவையாக இருக்கலாம். இந்த வகையான கேள்விகளை உங்களிடம் கேட்பதற்கான காரணம், உங்களது மேலாண்மை பண்பையும், இயல்பையும் இது வெளிப்படையாக காட்டும் என்பதுதான்.

5. உங்கள் பலவீனங்களை பலமாக காட்டுங்கள்

உங்கள் பலவீனங்களை பலமாக காட்டுங்கள்

எப்போதும் உங்கள் மனதில் நேர்மையான எண்ணங்களையே பதிய வையுங்கள். இது வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். நேர்காணலின் போது உங்களின் பலவீனங்கள் பற்றிய கேள்வியை கேட்கும் போது, “பலவீனத்தை பலவீனமாகவே காட்டாமல் பலமாக மாற்றி காட்டுவதில் இருக்கிறது உங்களின் திறமை”. இது உண்மையில் இராஜதந்திரமாகவும் இருக்கலாம்.

இதன் அர்த்தம் உங்களின் பலவீனத்தை பற்றி யாருக்கும் தெரிவிக்காமல், பலத்தை மட்டுமே உண்மையில் வலியுறுத்துவதாகும். உதாரணமாக, உங்களின் கடின உழைப்பை பற்றியும், உங்களின் சிந்தனையின் சிறப்பை பற்றியும் எடுத்து கூறுகையில், உங்களின் தனித்தன்மையை அவர்கள் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். இதற்கு தடுமாற்றமில்லாமல் நமது பதிலை தெளிவாக அளிக்கும் பொழுது, நமக்கான வேலையும் உறுதி செய்யப்படும்.


ALSO READ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here