இந்தியாவில் உள்ள உணவு வகைகளில் அனைவருக்கும் பிடித்த, தவிர்க்க முடியாத உணவு வகைகளில் ஒன்றாக இருப்பது ஊறுகாய். இதில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்தந்த பருவ காலங்களில் விளையும் பொருட்களை கொண்டு, அதற்கேற்ப பல்வேறு வகையான ஊறுகாய்களை செய்வது, பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இது பாரம்பரியமாகவும் கருதப்படுகிறது.
தயிர் சாதம் முதல் அனைத்துவிதமான உணவுகளுக்கும் ஊறுகாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஊறுகாயிலுள்ள நன்மை செய்யக் கூடிய பாக்டீரியாக்கள், செரிமானத்தை அதிகரிக்கிறது. இதனால், வயிற்றில் சேரும் நச்சுக்களை அழித்து, வெளியேற்றுகிறது. ஊறுகாயில் மினரல், வைட்டமின், நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை சரிப்படுத்தி, நமது உடலில் சர்க்கரை பாதிப்புகள் ஏற்படாதவாறு, உடலை காக்கும் தன்மை கொண்டவை.
பலநூறு ஆண்டுகளாக பூண்டு சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாகவே, பூண்டு பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் கனிமச்சத்துக்கள், உடலில் உள்ள செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. இதனால், தற்போது அதிகமாக விரும்பி செய்யப்படுவதில் ஒன்றாக பூண்டு ஊறுகாய் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு பூண்டு:

பூண்டு உணவில் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகரித்து தருகிறது. இது ஆன்டி வைரல், ஆன்டி ஃபங்கல், ஆன்டி பாக்டீரியா போன்ற அனைத்து விதமான நுண் கிருமிகளையும் எதிர்த்து போராடி, உடலை பாதுகாக்கும் தன்மை பூண்டிற்கு உள்ளது.
புற்றுநோயை தடுக்கும் பூண்டு:

குறிப்பிட்ட புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, பூண்டில் உள்ள ஆர்கனோ-ஸல்ஃபர் என்ற காம்பவுண்ட் உதவுகிறது.
CVD-யை குணபடுத்தும் பூண்டு:

CVD எனப்படும் கார்டியோவாஸ்குலர் நோய் கணிசமான பொருளாதார தாக்கத்துடன் உலகளாவிய இறப்புக்கு முக்கிய காரணமாகிறது. இதய நோய் (heart disease) அல்லது இதயக் குழலிய நோய் (Cardiovascular disease) என்ற வகை நோய்களில் இதயம் அல்லது குருதிக் கலன்களில் ஏற்படும் நோயாகும்.
அதாவது, தமனிகள் மற்றும் சிரைகளில் ஏற்படக் கூடியது. அதிகம் விற்பனையாகும் மூலிகை உணவுப் பொருள்களில் பூண்டும் ஒன்று. இது குறிப்பாக சி.வி.டி சிகிச்சை மற்றும் தடுப்பதில் புகழ்பெற்றதாகும். இதுபோன்ற பலவகையான நன்மையை பூண்டு நமக்கு தருகிறது.
இரும்புச்சத்துக்கு பூண்டு:

1. உடல், இரும்புச்சத்தை முழுவதுமாக பயன்படுத்துமாறு செய்ய உதவுவது பூண்டுதான். இரத்த ஓட்டத்தில் மட்டுமல்லாமல், இரத்த நாளங்களில் இருக்கும் பிரச்சனைகளையும், அடைப்புகளையும் சரிப்படுத்துவது, பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளின் வேலையாகும்.
2. இரும்புச்சத்துள்ள உணவை உண்ணும் போது, அதனை உடல் ஏற்றுக்கொள்ள வைட்டமின் சி தேவைப்படுகிறது. ஒரு சில நேரம் நல்ல ஆரோக்கியமான ஊட்டசத்துள்ள உணவுகளை உட்கொண்டாலும் கூட, அதன் முழுமையான பயன் உடலுக்கு சென்றடையாமல் போகலாம்.
3. சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை இரும்புச்சத்து குறைபாட்டால் குறையும். இது உடலில் உள்ள ஆக்ஸிஜன் ஓட்டம் மற்றும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு தீவிர பாதிப்புகளை உடலுக்கு ஏற்பட செய்கிறது. இதனை சரி செய்து கொள்ள பூண்டு நமக்கு உதவுகிறது.
மூட்டு வலி, வாதத்தை தடுக்கும் பூண்டு:

வாதத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க பூண்டு உதவுகிறது. மேலும், பூண்டிற்கு வாதம் மற்றும் மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கும் பண்பு உள்ளது. இதனால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
மேம்பட்ட ஆரோக்கியத்துக்கு பூண்டு:

இதய ஆரோக்கியத்தை பேணி பாதுக்காப்பதில் அதிகப்படியான பங்கினை பூண்டு பெற்றுள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மற்ற பண்புகள் கொழுப்பை குறைக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. பூண்டு உடலுக்கு மேம்பட்ட ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இத்தகைய நன்மைகளை கொண்ட பூண்டினை, இன்ஸ்டன்ட் ஊறுகாய் ரெசிபியாக நீண்ட நாள் வைத்து, பயன்படுத்தும் வகையில் எப்படி செய்வது… என்பதை தற்போது பார்க்கலாம்.
பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:

- சிவப்பு மிளகாய்த் தூள் – 8 டீ ஸ்பூன்
- எலுமிச்சை – 3
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் – 1 கப்
- தண்ணீர் – 3 கப்
- வறுத்த வெந்தயப் பொடி – ½ டீ ஸ்பூன்
- பூண்டு – 1 கிலோ
- மஞ்சள் தூள் – 4 டீ ஸ்பூன்
செய்முறை:
முதலில் பூண்டை முழுவதுமாக தோல் நீக்கி, பின் இட்லியை வேக வைப்பது போல பூண்டை ஆவியில் நன்கு வேக வைத்துக்கொள்ளவும். பிறகு இறக்கி, ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அதில் மசாலா பொருட்களான சிவப்பு மிளகாய்த் தூள், வறுத்த வெந்தயப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கையால் கலக்கவும். பின்னர், அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் ஊற்றி சூடேறியதும், கடுகு போட்டு தாளித்து இறக்கிவிடவும். இதனை, வேக வைத்து மசாலா சேர்த்து வைத்துள்ள பூண்டுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு, ஓரிரு மணிநேரங்கள் ஊற விடவும். இப்போது வீட்டில் செய்த, சுவையான இன்ஸ்டன்ட் பூண்டு ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை 3 மாதங்கள் வரை குளிர் சாதனப்பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம்.