காதல் என்றால் என்ன? என்பதிலிருந்து காதலை பற்றிய பற்பல கேள்விகளும் சந்தேகங்களும் நாளுக்கு நாள் இளம் தலைமுறையினருக்கு அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. காதலில் சிறப்பு என்னவென்றால், எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி உண்மையான அன்பை வெளிப்படுத்துவதுதான்.
பூமி தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை பூமியில் காதல் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ்வதற்கு சாத்தியமே கிடையாது… நட்பிற்கு எப்படி அழிவு கிடையாதோ அது போலவே காதலுக்கும் என்றும் அழிவே கிடையாது.
பெரும்பாலும், இன்று காதல் என்றாலே ஆண் பெண் மட்டுமே சம்பந்தபட்டதாகவே பார்கின்ற சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் காதல் என்பது ஒரு ஆண் ஒரு பெண் இடையில் மட்டும் தோன்றும் உணர்வு கிடையாது.
உதாரணமாக ஆண் பெண் காதலாக தொடங்கி, கணவன் மனைவியாக, தன் குழந்தைக்கு தாய் தந்தையாக, தன் பேரன் பேத்திக்கு தாத்தா பாட்டியாக என அன்பை வெளிப்படுத்தும் முறையில் மாற்றங்கள் இருந்தாலும், அன்பில் எந்தவித மாற்றமும் இருக்காது. அதனை வெளிப்படுத்தும் முறைதான், காலப்போக்கில் மாறிக்கொண்டு செல்கிறதே தவிர காதல் மாறுவதில்லை.
- எது காதல்…
- எப்படி அந்த உணர்வு இருக்கும்…
- எந்த விஷயத்தில் விட்டுக் கொடுத்து, நிலையாக நிற்க வேண்டும்
- அதில் உள்ள பிரச்சினைதான் என்ன…
- Love Breakup எப்படி தவிர்ப்பது… போன்றவற்றிக்கு காரணமான காதலின் மூன்று வித டைமென்ஷன் பற்றி இங்கு பார்க்கலாம்.
1. காதல் (Love)
2. க்ரஷ் (Crush) – ஈர்ப்பு
3. இன்ஃபாச்சுவேஷன் (infatuation) – மோகம்
ஆகிய இந்த மூன்றுக்கும் கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது. பெரும்பாலும் இதனை ஒரே மாதிரியானதாகவே பார்கின்றனர். ஆனால், இது உண்மை கிடையாது. மனிதர்களில் தொடங்கி பல்வேறு ஜீவ ராசிகள் வரையுமே, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரு உன்னதமான உணர்வாக காதல் உள்ளது. அந்த வகையில் இப்போது காதலை பற்றி தெரியாத பல விஷயங்களை இங்கு விரிவாக காணலாம்.
1. காதல் (Love)

நமக்கு எல்லாம் தெரிந்தது போல இருந்தாலுமே ஏனோ இன்னும் கூட காதல் என்றாலே பயமும் பதட்டமும் இருக்க தான் செய்கிறது. காதலில் இன்னுமும் சொதப்பி கொண்டுதான் இருக்கின்றோம். தற்போது காதல் ஏற்படுவதற்கான காரணங்களை அறிவியல் ரீதியாகவும் கண்டுபிடித்துள்ளனர். “காதல் என்றால் அன்பு தானே…” என்றுமே உடலும் மனமும் சேர்ந்ததுதான் காதல் என்பதை மறுக்க முடியாது.
சிலருக்கு காதல் தற்செயலாக நடக்கும்!
சிலருக்கு விபத்தாக முடியும்!
இன்னும் சிலருக்கு என்ன செய்தாலும் காதல் சிக்கலாகவே இருக்கும்!
இப்படி நடப்பது விபத்தா? இல்லை விதியா? என்பது அவர்களுக்கே கூட தெரியாது. பெரும்பாலும், நாம் அதிகம் விரும்புவது PERFECT COUPLE என்பதைதான். ஆனால், இதுவே சிலநேரம் எதிர்மறையாகவும் நடக்கும்.
‘Super Pair‘ என்றிருப்பவர்கள் அனைவரும் வாழ்வின் எல்லை வரை ஒன்றாக இருப்பது கிடையாது. அதுவே ‘ஒத்துவராது’ என்றிப்பவர்கள் தங்கள் ஆயுள் வரை சேர்ந்து வாழ்ந்து காட்டுகிறார்கள். இது எப்படி நிகழ்கிறது. ஏனென்றால், காதலுக்கு உருவங்கள் கிடையாது; ஆனால், என்றுமே உணர்வுகள் உண்டு என்பதாலே…
ஒருவர் மற்றொருவர் மீது அளவுகடந்த அன்பினை செலுத்துவதால் அதன் பெயர் காலப்போக்கில் காதல் என்றாகியது. அப்படி பார்த்தால், அம்மா தன் குழந்தை மீது வைத்துள்ள அன்பும், ஒரு குழந்தை தந்தை மீது வைத்துள்ள அன்புமே ஒரு வித காதல் தான். எப்பொழுதும் யாராலும் காதலின் வெளிபாடு இப்படிதான் இருக்கும் என வரையறுக்கவே முடியாது.
2. ஈர்ப்பு (Crush)

ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படக்கூடியதுதான் ஈர்ப்பு. இது எதிர்பாலினத்தை மட்டுமே ஈர்க்கும் ஈர்ப்பாக இருக்காது. இதற்கு காரணம் ஒருவரின் குணத்தினை பார்த்தோ, ஒருவர் பழகும் விதமோ, ஒருவரின் திறமையோ கூட இருக்கலாம்.
பொதுவாகவே நாம் தொடர்பு கொள்ள முடியாத அளவில் உள்ளவர்கள் மீதே அதிகம் ஈர்ப்பு ஏற்படும். ஒரு பெண்ணும் ஆண் மீதும், ஒரு ஆணுக்கு பெண் மீதும் வருவது இயல்பானது. இது தவிர ஒரே பாலினத்தில் உள்ளவர்கள் மீதும் ஒரு வகையான ஈர்ப்பு (Crush) தோன்றக்கூடும். உதாரணமாக,
“எப்பவும் இளைய தளபதி விஜய் அப்டினா எனக்கு உசுரு”
” A.R. ரகுமான் இசைன்னா எவுளோ நேரம் வேணாலும் கேட்டுட்டே இருப்ப”
என்று சொல்வதுதான் Crush… இப்படி நமக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் மீது, சமுதாயத்தின் மீது அக்கறை கொள்பவர்கள் மீது, பாடகர்கள் மீது, நமக்கு தேவையான நேரத்தில் உதவுபவர்கள் மீது என்று அடுக்கி கொண்டே போகலாம்.
ஈர்ப்பு ஒருவர் மீது ஏற்படக்கூடிய காரணத்திற்கு எந்த எல்லையும் கிடையாது. இது உயிரற்ற பொருட்கள் மீதும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு தினசரி தொலைகாட்சிகளிலோ அல்லது படங்களிலோ வர கூடிய கதாப்பாத்திரங்களின் மீது கூட ஈர்ப்பு ஏற்படும்.
இவையெல்லாம் நிகழ்வதற்கான காரணம், ‘நமது பார்வைகளில் CRUSH ஆக தெரியும் ஒரு நபரை நம்மால் சுலபமாக பார்த்துவிட முடியாது; விரைவாக சந்தித்து உரையாட முடியாது‘ என்பதால் தான் அவர்களின் மீது அளவிற்கு அதிகமான ஈர்ப்பு ஏற்படுகிறது. இதுவும் ஒரு வித அன்பு தான்.
3. மோகம் (infatuation)

பொதுவாகவே, இன்ஃபாச்சுவேஷன் தன் பால் உள்ளவர்கள் மீதோ அல்லது எதிர்பாலினம் மீதோ வரக்கூடிய ஒரு வித கவர்ச்சி எனலாம். அந்த நபர் நமக்கு மிகவும் அருகிலேயே இருக்கக்கூடும். அந்த நபருடன் தான் நமது நேரத்தை அதிகமாக தினந்தோறும் செலவழித்துக் கொண்டிருப்போம்.
இதனால் நெருக்கமும் அதிகரித்து, ஈர்ப்பும் உண்டாகக்கூடும். இது அருகில் இருப்பதாலேயே வரக்கூடியதாகும். சில நாட்களுக்கு பிறகும் கூட, இதே போல் தொடரலாம் அல்லது இது காதலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
- இன்ஃபாச்சுவேஷன் என்பது ஹார்மோனின் கோளாறு தான். இதன் காரணமாகவே, டீன் ஏஜ் பருவத்தினருக்கு மட்டுமே, இது வரக் கூடியது என்ற கருத்தும் உள்ளது.
- இன்ஃபாச்சுவேஷன் வருவதற்கு உண்மையில், வயது எல்லையே கிடையாது. பெரும்பாலும் இன்ஃபாச்சுவேஷன் ஒரு குறுகிய கால உணர்வாகவே இருக்கிறது.
- பொதுவாக ஒருவர் வலுவான காதல் உணர்வுகளை உருவாக்கிய மற்றொரு நபரிடம் ஒரு காரணமற்ற உணர்ச்சியால் கடத்தப்படும் நிலைக்கு மோகம் (infatuation) என்பர்.
- மோகம் (இன்ஃபாச்சுவேஷன்) ஒரு முதிர்ந்த காதலாக உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது. வெறித்தனமான வலுவான காதல் என்றும் கூறலாம்.
இதன் காரணமாக, எப்போதும் அதே சிந்தனையில் மூழ்க்கி கிடைப்பதால் மற்ற வேலைகளின் மீதுள்ள கவனம் குறைந்துவிடும். வாழ்நாள் முழுக்க அந்தவொரு நபரை மட்டுமே உலகமாக என்னும் நிலையும் ஏற்படலாம்.
அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இதை சரியாக கையாளும் பக்குவம் இருக்கும். இளம் தலைமுறையினருக்கு அது தெரியாது. இந்தவொரு உணர்வு அந்த நபரிடம் நீண்டகாலம் பழகிவிட்டாலோ அல்லது அந்த நபரை இனி வாழ்நாளில் பார்க்கப்போவது இல்லை என்றாலோ இன்ஃபாச்சுவேஷன் போய்விடும்.