Happy Teachers Day Speech in Tamil

செம்மொழி எனும் மகுடம் சூடிய என் தாய்மொழியாம் தமிழுக்கு எனது முதற்கண் வணக்கத்தை தெரவித்துக் கொள்கிறேன். கல்வி எனும் திரியை போட்டு அறிவு எனும் விளக்கை ஏற்றி வாழ்வினை ஒளிர செய்து, எங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறைமைகளை மெருகூட்டிய எனது அன்பான ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
மாதா, பிதா, வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்தவர் குரு ஆவார். அவர் தான் இந்த உலகை கற்பிக்கும் சிறந்த ஆசான். நம்முடைய கல்வி முறையில் அடுத்தடுத்து வகுப்பை கடக்கும் போது, மாற்றம் காணாதவர்கள் யார் என்றால் அவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. வெறும் கல்லாய் இருக்கும் மாணவர்களை பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மாற்றியவர்கள் தன்னலமற்ற ஆசிரியர்களே. மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற அனைத்தையும் கற்றுத் தந்து, அவனை நல்லவனாகவும், பண்புள்ளவனாகவும், அறிஞராகவும், மேதையாகவும் உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்று சொன்னால், அதை யாராலும் மறுக்க முடியாது.
ஆசிரியர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்னும் வரிகளுக்கு ஏற்றவாறு இறைவனுக்கு நிகராக கருதப்படும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தி அவர்களை கொண்டாடும் நாள் தான் இந்த ஆசிரியர் தினம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, ஒரு மாம்பெரும் தத்துவ மேதையாக இந்த உலகத்திற்கு தன்னை வெளிக்காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதியை தான் இன்று வரை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வரலாறு

1888-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05 ஆம் தேதி அன்று டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், திருத்தணியில் உள்ள சர்வபள்ளி என்னும் கிராமத்தில் வீராச்சாமிகும், சீதம்மாக்கும் மகனாக பிறந்தார். இவருடைய தாய் மொழி தெலுங்கு ஆகும். இவர் தனது தொடக்க பள்ளி கல்வியை திருவள்ளூரில் உள்ள ‘கௌடி’ பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பதியிலுள்ள, ‘லூத்தரன் மிஷன்’ என்ற உயர்நிலை பள்ளியிலும் படித்தார்.
இதனைதொடர்ந்து, தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் B.A பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் M.A பட்டமும் பெற்றார். பின்னர், 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1921 ஆம் ஆண்டு அன்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 1923 ஆம் ஆண்டில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் “தத்துவ உன்னதமான மற்றும் இலக்கிய தலைசிறந்த படைப்பு” என்று பாராட்டப்பட்டது.
1931 இல், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 1939 இல், ராதாகிருஷ்ணன் பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். 1949 இல், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சோவியத் யூனியனுக்கான தூதராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் 1952ல் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் 1962ல் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாட வேண்டும்?

நல்ல வழிகாட்டியாக விளங்கி மாணவர்களை சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். நாடு முழுவதும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. நமது ஆசிரியர்களின் பொறுமையும், தியாகவும் வருடத்தில் ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டும்.
முடிவுரை:
எந்த வார்த்தைகளும் உங்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்க போதாது. உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மீண்டும் நன்றி. ஆறறிவுக்குள் சிந்தனையைப் பெருக்கி, சரியாமல் நிறுத்தி, செயலைத் திருத்தி, கீர்த்தியை உயர்த்தும் என் அன்பான ஆசிரியர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்.